Ethics for candidates and agents at the counting center: Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வெங்கடபிரியா தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 02.05.2021 அன்று காலை 8.00 மணிக்கு 147.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மற்றும் 148.குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள், முகவர்கள் கண்டிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து நெகட்டிவ் சான்று பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா தடுப்பூசி ஒரு தவணை மட்டும் செலுத்தப்பட்டிருப்பின், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து நெகட்டிவ் சான்று இருக்கும்பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா தடுப்பூசி இரு தவணைகள் செலுத்தப்பட்டிருப்பின், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுவர். தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பேனா, பென்சில், வெள்ளைத்தாள் மற்றும் படிவம் 17சி-ன் நகலினை எடுத்து வரலாம்.

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு வழங்கப்படும் அடையாள வில்லையில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேசை எண் மற்றும் அவரது கையொப்பம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேசை தவிர வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடாது. தேர்தல் பார்வையாளர்கள் நீங்கலாக மற்றவர்கள் கைபேசி, ஐ பேடு, மடிக்கணினி போன்ற மின்சாதனப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை. மேலும், தீப்பெட்டி, புகையிலைப் பொருட்கள், பற்றவைப்பான், பான் பராக், குட்கா மசாலா, ஹான்ஸ், மது வகைகள் மற்றும் இதர குளிர்பானங்கள் போன்ற பொருட்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. அரசியல் பேசுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை வருமாயின், அந்த முகவர்களது அனுமதி ரத்து செய்யப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திலிருந்தும், வளாகத்திலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள்.

மேசை வாரியாக நியமனம் செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஏதேனும் முரண்பாடு இருப்பின் மேசை அலுவலர்களுடன் விவாதம் செய்யாமல் தங்களது முதன்மை முகவர், வேட்பாளரிடம் தெரிவித்து அதற்குரிய தீர்வு காண வேண்டும். மேலும், வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் அனைத்து அலுவலர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் மற்றும் கையுறை அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

வாக்கு எண்ணும் கூடம் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தால் இணையதளம் மூலம் நேரடியாக கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. வாக்கு எண்ணும் கூடத்தில் அனைத்தும் முகவர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

எனவே, பெரம்பலூர; மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வேட்பாளர்களும், முகவர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கையினை சிறந்த முறையில் நடத்த தேவையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!