Exhibition of Traditional Foods in Perambalur: 20 Hotels including Ashwins awarded Hygiene Rating Certificate!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உணவு திருவிழா (பயணிப்பீர் பாரம்பரியத்தை நோக்கி) என்ற தலைப்பில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகளின் கண்காட்சி திருவிழா கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்றது.

உணவு திருவிழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் தாய்மார்களுக்கு தேவையான 20 பாரம்பரிய உணவு வகைகளும், மகளிர் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு தேவையான 39 பாரம்பரிய உணவு வகைகளும், தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூலம் 38 பாரம்பரிய உணவு வகைகளும், தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூலம் 10 பாரம்பரிய உணவு வகைகளும், அஸ்வின்ஸ் ஹோம்ஸ் மூலம் 16 பாரம்பரிய உணவு வகைகளும் என 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் பயணிப்பீர் பாரம்பரியத்தை நோக்கி என்ற உணவு திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் சிறந்த பாரம்பரிய உணவு தயாரிப்போருக்கான போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டிக்கு நடுவராக கிரேஷ் ஜீசஸ் ராஜ் லைட்டி பிரபாகரன் கலந்து கொண்டு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மற்றும் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை கல்லூரி நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு போட்டிக்கான வெற்றியாளர்களையும், தனலட்சுமி சீனிவாசன் கலை கல்லூரி துணை முதல்வர் பி.கஜலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு போட்டிக்கான வெற்றியாளர்களையும், ரோவர் கல்லூரி முதல்வர் எம்.ஜெயந்தி மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு போட்டிக்கான வெற்றியாளர்களையும் தேர்வு செய்தனர்.

வெற்றி பெற்ற குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பெரம்பலூர் அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், பாடாலூர் அருள்மிகு பூமலை சஞ்சீவிராயர் திருக்கோவில்களுக்கு BHOG சான்றிதழ்களும், பெரம்பலூர் பெரியார் நகர் அங்கன்வாடி மையத்திற்கு Eat Right Certification சான்றிதழ்களும், சிறுவயலூர், சிறுவாச்சூர் மேற்கு காலனி, விளாமுத்தூர் அங்கன்வாடி மையங்களுக்கும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அஸ்வின்ஸ் ஹோட்டல், உட்பட 20 நிறுவனங்களுக்கு Hygiene Rating சான்றிதழ்கள் கலெக்டர் வெங்கடபிரியா, எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

பின்னர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்ட “பயணிப்பீர் பாரம்பரியத்தை நோக்கி” என்ற திட்டத்திற்கான இலச்சினை வெளியிடப்பட்டது.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சி.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, அரசு மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் ஜூலி, துணை காவல் கண்காணிப்பாளர் வளவன், பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), க.ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கவிக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் , மகளிர் திட்ட அலுவலர் ராஜ்மோகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!