????????????????????????????????????

Expired drugs worth Rs 10 lakhs at government hospital: Legislative assembly Council inspection shock

நாமக்கல், டிச.27: நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 7,000 எண்ணிக்கையிலான காலாவதியான மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளது என தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.செம்மலை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுவினர் அதன் தலைவர் எஸ்.செம்மலை தலைமையில் வியாழக்கிழமை நாமக்கல் வந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி கழகம் மூலம் கடனுதவி பெற்று தொழில் செய்துவரும் கீரம்பூரை சேர்ந்த பயனாளிகளை நேரில் சந்தித்து, அவர்களின் தொழில்களையும் குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிலுவம்பட்டியி்ல் உள்ள மளிகை கடையில் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பயனாளிகள் வாங்கிய கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி, தொழில்களையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, இம்மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கனிம வளம், சிறுபான்மையினர் நலம், மருத்துவக் கழகம் மற்றும் அரசு துறைகளை செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், அதன் முன்னேற்றங்கள் குறித்து, மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் குழுவின் தலைவர் எஸ்.செம்மலை ஆய்வு மேற்கொண்டார்.

இதில் சட்டப்பேரவை சிறப்புச் செயலர் லி.சு.வசந்திமலர், குழு அலுவலர் பா.ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் எல்.உஷா உள்பட அனைத்துத்துறை சார்ந்த முதன்மை அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினர் சார்பில் இந்த ஆய்வுகள் கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை கரூரிலும், வியாழக்கிழமை நாமக்கல்லிலும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சேலத்தில் இதுபோன்ற சுற்றுப்பயணம் நடைபெறும். பொது நிறுவனங்கள் குழு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கனிம வளம், சிறுபான்மையினர் நலம், மருத்துவக் கழகம் ஆகிய நான்கு அரசு நிறுவனங்களில் ஆய்வு செய்ய தேர்ந்தெடுத்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தணிக்கை துறை அனுப்பி வைத்த ஒப்புதலுக்கு ஏற்றவாறு கோரிக்கைகள் தரப்பட்டு சரியான பதில் அளிக்கப்படும். இம்மாவட்டத்தில் அரசின் அனைத்து துறைகளும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதால் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இதுபோன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் அமைச்சர் பி.தங்கமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கு பெருமளவில் உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. குறித்த காலத்தில் குடிநீர்ப் பணிகள் முடிக்கப்பட்டு, பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மேலும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சுயதொழில் செய்து வாழ்க்கையில் மேம்பட பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல மாவட்டங்களில் இத்திட்டத்தில் குறைவான நிதி அளிக்கப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டம் அதிக நிதியை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் மருத்துவ சேவைகள் சிறப்பாக உள்ளது. தேவையான மருத்துவக் கருவிகள் உள்ளன. இருந்தபோதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.10௦ லட்சம் மதிப்பிலான 7,000 காலாவதியான மருந்துகள் கையிருப்பில் உள்ளது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

காலாவதியாகும் நிலையில் உள்ள மருந்துகளை குறித்த காலத்திற்கு முன்பாகவே பிற அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளோம்.
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உரிய மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்படும்.

மாவட்டத்தில் பொது நிறுவனங்கள் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த நிதி அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள், காலதாமதம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உரிய காலத்தில் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்கிறதா என்றும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் பிளாட்டினம் எடுப்பது குறித்த ஆய்வு பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

ஆய்வு குழுவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஈஸ்வரன்(பவானிசாகர்), ஆ.சண்முகம்(கிணத்துக்கடவு), கோவி.செழியன்(திருவிடைமருதூர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!