Extend the Legislative Assembly: Make a Law to Sterlite Plant PMK Founder Ramadoss
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :
மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. இது சரியான நடவடிக்கை என்றாலும் கூட, மாலையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து முழுமையாக விவாதிக்க போதிய நேரம் கிடைக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணைய அனுமதி பெற்றுத்தந்ததன் மூலம் தமிழகத்திற்கு மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது.
மேகதாட்டு அணை குறித்த ஆய்வுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், மன்னர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதைப் போல, பினாமி ஆட்சியாளர்களைப் போலவே அதிகாரிகளும் அலட்சியமாக இருந்ததன் விளைவாகத் தான் புதிய அணைக்கான ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது.
இது தொடக்கக்கட்ட பணிகளுக்கான அனுமதி தான்; அணை கட்டுவதற்கான அனுமதி அல்ல என்று பல தரப்பிலிருந்தும் விளக்கமளிக்கப்படும் போதிலும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் கனவை கர்நாடகம் நிறைவேற்றிக் கொள்ளும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மேகேதாட்டு அணை குறித்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்யவும், அனுமதியை திரும்பப்பெறும்படி வலியுறுத்தவும் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் உதவும். ஆனால், காவிரி சிக்கல் மட்டுமின்றி, கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த ஏராளமான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ள நிலையில், சில மணி நேரங்கள் மட்டும் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
மாலை 4.00 மணிக்கு தொடங்கும் பேரவைக் கூட்டத்தை அதிகபட்சமாக இரவு 8.00 மணி வரை நடத்த முடியும். தமிழகத்தின் தலையாய பிரச்சினைகள் குறித்து 4.00 மணி நேரத்தில் எத்தகைய விவாதங்களை நடத்த முடியும்? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
கஜா புயல் தாக்குதலால் காவிரி பாசன மாவட்டங்கள் சின்னாபின்னமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பிரதமர் இன்னும் வரவில்லை. தமிழக அரசின் சார்பில் மிகவும் குறைவாக ரூ.15,000 கோடி மட்டுமே இழப்பீடு கோரப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி உதவி வழங்கவில்லை. ரூ.353 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த அநீதி குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவாதிக்காமல் இருக்க முடியுமா?
1996&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் உயிரிழப்பதற்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட போதே, அது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை மிகவும் பலவீனமானது; அதற்கு மாறாக தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், உலக நீதிமன்றத்திற்கே சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என ஆட்சியாளர்கள் எகத்தாளம் பேசினார்கள். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எந்த நேரமும் ஆணையிடலாம் என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது.
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை தடுக்க இப்போதும் வாய்ப்புகள் உள்ளன. ஒன்று தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து அறிவிப்பதாகும்.
இரண்டாவது, தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு தடை விதித்து தொழிற்சாலைகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது ஆகும். நாளை மாலை நடைபெறவுள்ள பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற முடியும்.
எனவே, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். அதில் மேகேதாட்டு அணை விவகாரம், கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், சென்னை & சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். அதன் நிறைவாக உரிய தீர்மானங்கள் – சட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், என தெரிவித்துள்ளார்.