Farmers allowed to take silt in 312 water bodies for free: Perambalur Collector Information!


பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க, 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதி 12(2)-இன்படியும், அரசாணை எண்.50 தொழிற் (எம்எம்.சி.1) துறை, நாள்:27.04.2017-இன்படியும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 285 நீர்நிலைகளுக்கான ஏரி, குளம், குட்டை மற்றும் ஊரணிகளின் பட்டியல்கள் மற்றும் பொதுப்பணித்துறைக்கான 27 ஏரிகளுக்கான பட்டியல்கள் ஆகியவற்றில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடிய அளவில் வண்டல் மண் / களிமண் / கிராவல் மண் உள்ள மாவட்ட அரசிதழ் எண்.3, நாள்:23.03.2023 மற்றும் அரசிதழ் எண்.6, நாள்:26.04.2023-இன்படி சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 87 நீர்நிலைகளும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 93 நீர்நிலைகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 72 நீர்நிலைகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 60 நீர்நிலைகளும் என மொத்தம் 312 நீர்நிலைகளில் விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ள அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஏரிகளும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஏரிகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஏரிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஏரிகளும் என மொத்தம் 27 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 84 ஏரிகளும் / குளங்களும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 91 ஏரிகளும் / குளங்களும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 63 ஏரிகளும் / குளங்களும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஏரிகளும் / குளங்களும், என மொத்தம் 285 ஏரிகள் / குளங்கள் உள்ளன.
அரசு உத்தரவு மற்றும் கனிம விதிகளின்படி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சொந்த உபயோகத்திற்காக மட்டும் வண்டல் மண் / களிமண் / கிராவல் மண் கனிமங்களை நஞ்சை நிலம் எனில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகள், புஞ்சை நிலம் எனில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகள், சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகள் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் பணிக்கு 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் என்ற அளவில் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் / களிமண் / கிராவல் மண் எடுத்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மண் பரிசோதனை கூடம் / கல்வி நிறுவன ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட மண் பரிசோதனை அறிக்கையுடன் பெரம்பலூர், மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம்.
மேற்படி விதியின் கீழ் வண்டல் மண் / களிமண் / கிராவல் மண் வழங்கப்படும் அனுமதியானது வீட்டு உபயோக மற்றும் வேளாண் நோக்கத்திற்கு நீங்கலாக இதர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி இல்லை.
மேற்படி விதிகளின் கீழ் மண் எடுக்க அனுமதி பெற, மாவட்ட ஆட்சித்தலைவர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பித்து விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!