Farmers are free to take the silt in lakes in Namakkal district, Permission: Collector Announcement
நாமக்கல் மாவட்ட ஆட்சியார் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் உத்தரவுப்படி விவசாயிகள் ஏரி, குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை வேளாண்மைப் பணிக்காக இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினை சமாளிக்கும் வகையில் நீண்டகாலத் தீர்வு நடவடிக்கையாக ஏரிகளின் தண்ணீர் கொள்ளளவினை ஆழப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளும் விதத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்.
நாமக்கல் தாலுக்காவில் 205 ஏரிகள், ராசிபுரம் தாலுக்காவில்70 ஏரிகள், சேந்தமங்கலம் தாலுக்காவில் 48 ஏரிகள், திருச்செங்கோடு தாலுக்காவில் 60 ஏரிகள், பரமத்தி-வேலுர் தாலுக்காவில் 11 ஏரிகள் மற்றும் குமாரபாளையம் தாலுக்காவில் 27 ஏரிகள் என மாவட்டத்தில் மொத்தம் 421 ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள நாமக்கல் மாவட்ட அரசிதழ்களில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் நன்செய் நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 25 டிராக்டர் லோடுகளுக்கு மிகாமலும் (75 கனமீட்டர்), புன்செய் நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 30 டிராக்டர் லோடுகளுக்கு மிகாமலும் (90 கனமீட்டர்) வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களை அபிவிருத்தி செய்யலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை சம்மந்தப்பட்ட தாலுக்கா அலுவலகத்தில் பெற்று விண்ணப்பத்துடன் மனுதாரரின் விவசாய நிலம் மற்றும் ஏரி ஆகியவை எந்த வருவாய் கிராமம் அல்லது அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்துள்ளது என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மீண்டும் தாலுக்கா அலுவலகத்தில் அளித்து அனுமதி பெற்று இலவசமாக வண்டல் மண் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.