Farmers arrested for attempting to sabotage Perambalur Collector’s office demanding payment of sugarcane

பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.

கடந்த 2017- 2018 ஆம் ஆண்டு அறவைப்பருவத்திற்கு வெட்டி அனுப்பிய கரும்பிற்கு உரிய நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் காலம் கடத்தும் அரசையும், பெரம்பலூர் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலையையும் கண்டித்து இன்று காலை அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், மற்றும் டிராக்டர் உரிமையாளர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்து, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதில், வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக் கூடாது, மாநில அரசு பரிந்துரை விலையை அமல்படுத்த வேண்டும், சாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த 1.5 மடங்கு கூடுதல் விலை அறிவித்து, கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், தனியார் ஆலைகளில் 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மாநில அரசு பரிந்துரை விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தினர்.

பின்னர், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றவர்களை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். அப்போது விவசாயிகள் கைது செய்வதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் சிறிது நேரம் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து புதிய பேருந்து நிலையம் பகுதியில் பாதிக்கப்பட்டது.

இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.வேணுகோபால், பெரம்பலூர் கரும்பு உற்பத்தியாளர் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், டிராக்டர் உரிமையாளர் சங்கம், பங்குதாரர் மற்றும் கரும்பு வளர்ப்போர் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கங்களை சேர்ந்த நூற்றுக் கணக்கான உழவர்கள், விவசாய சங்கத்தினர் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் அச்சசங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!