Farmers can register on “Grain’s website” to get government welfare assistance : Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
2023-ம் ஆண்டு ஏப்ரல் -1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ள வேளாண் அடுக்ககம் திட்டமான கிரெயின்ஸ் வலைதளத்தில், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து பயனடையலாம். நில விவரங்களுடன் விவசாயிகள் விவரம், நில உடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடமை வாரியாக சாகுபடி பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு GRAINS என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பேரிடர் மேலாண்மை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் இணைக்கப்பட உள்ளன.
இந்த வலைதளம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் நகல், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா, ஆவண நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடனடியாக ஒப்படைத்து, கிரெயின்ஸ் வலைதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.