Farmers demand extension of time to insure maize crop in Perambalur district
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பெரும்பாலானோர் மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக அளவு மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
தற்போது பாரத பிரதம மந்திரியின் சிறப்பு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்காச்சோளத்துக்கு வரும் 15ஆம் தேதியும், நெல் பயிருக்கு வரும் 30ம் தேதி வரையும் கால அவகாசம் வழங்கப்பட்டது. குறிப்பாக மக்காச்சோளத்துக்கு பயிர் காப்பீடு செய்ய 15 ந்தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை 14 ந்தேதி தீபாவளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 15ஆம் தேதி இரண்டு நாட்கள் விடுமுறை தினம். இதனால் பெரும்பாலான விவசாயிகள் தற்போது மக்காச்சோள பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்காக இ-சேவை மையம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் குவிந்தவண்ணம் இருந்தனர்.
கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் கடைசி இரண்டு நாட்கள் விடுமுறை தினமாகிவிட்டதால் பெரும்பாலான உழவர்கள் காப்பீடு செய்ய முடியவில்லை என்பதால், மாவட்ட நிர்வாகம் மக்காசோளம் பயிர் காப்பீடு செய்ய கூடுதல் கால அவகாசம் பெற்றுத் தர வேண்டும். என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.