Farmers’ Union protest in Perambalur! Under the leadership of State Secretary R. Rajashidambaram!


பெரம்பலூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக இன்று காலை 11:00 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உழவர் பெருந்தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடுவின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் அரசின் கவன ஈர்ப்பு விவசாயிகள் கோரிக்கை முழக்க கூட்டம் பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உழவர் பெருந்தலைவர் நாரயணசாமி நாயுடு சிலை முன்பாக மாநில செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் தலைமையில் நடந்தது. விவசாயிகள் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வி.நீலகண்டன் விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். இதன் பின்னர் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் கோரிக்கை முழக்கமிட்டனர். மாவட்ட பொருளாளர் மணி முன்னிலை வகித்தார்.

கணேசன், மாநில செயலாளர், பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். போராட்டத்தில், இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் பிறப்பு,இறப்பு, தனிப்பட்டா, கூட்டுப்பட்டா, திருமண உதவித் திட்டம் போன்ற சான்று ஆவணங்கள் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு அரசின் மக்கள் சாசனம் நிர்ணயித்த காலக் கெடுவிற்குள் வழங்கப்படுவதில்லை. உரிய காலக் கெடுவிற்குள் வழங்க தமிழக அரசு ஆவண செய்திட வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் 1984( யு டி ஆர் சர்வே)க்கு முன்பு உள்ள ‘அ’ பதிவேடு ஆவணங்கள் நொறுங்கி சிதிலமடைந்து உள்ளதால் வருவாய்த் துறையினர் விவசாயிகள் ‘அ’ பதிவேடு நகல் கேட்டால் வழங்க இயலாது என தெரிவிக்கின்றனர்.எந்தெந்த கிராமங்களில் ‘அ’ பதிவேடு ஆவணங்கள் சேதமடைந்துள்ளது என்பது குறித்த விபரத்தினை கண்டறிந்து அதற்குரிய ஆவணங்களை சென்னையிலுள்ள நில அளவை இயக்குனர் அலுவலகத்திலிருந்து பெற்று விவசாயிகளுக்கு ‘அ’ பதிவேடு நகல் கிடைத்திட ஆவண செய்திட கேட்டுக் கொள்கிறோம்.

விவசாயிகளின் பட்டா நிலம் அவர்களுக்கு தெரியாமலேயே தரிசு நிலம் மற்றும் நத்தம் நிலமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை தடுத்திட விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் வருவாய்த்துறை மூலம் கிராமங்களில் அறிவிப்பு செய்து விழிப்புணர்வு கூட்டம் நடத்திட வேண்டும்.

உரம், பூச்சிமருந்து, ஆள் கூலி, அறுவடை உள்ளிட்ட இடுபொருள் செலவுகள் பல மடங்கு அதிகமான நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு தற்போது ஆளும் கட்சியாகிய தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கரும்பிற்கு டன் ஒன்றிற்கு ரூ.4,000 வழங்கிட வேண்டும்.

மத்தியில் ஆளும் பிஜேபி அரசு 2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்று அறிவித்துள்ளதை இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகளின் விலை பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைத்திட உத்திரவாதமான ஆதரவு விலை நிர்ணயித்து அதனை சட்டபூர்வமாக்க வேண்டும். மத்திய அரசு இதை உடன் நிறைவேற்றிட வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி பரப்பளவு அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு கூடுதல் ஒதுக்கீடு பெற்று விவசாயிகள் பருவத்தில் சாகுபடி செய்ய ஏதுவாக யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களும் தட்டுப்பாடின்றி உரிய நேரத்தில் கிடைத்திட ஆவண செய்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் கரும்பு தவிர்த்த அனைத்து வகையான பயிர்க்கடனையும் குறுகிய, மத்திய,நீண்ட காலக் கடன் என்ற பாகுபாடின்றி ஓராண்டு கெடுவில் விவசாயிகள் திருப்பி கட்டும் வகையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வழங்கப்பட்டு வருவதைப் போல திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் தீர்மானம் நிறைவேற்றியதை அமல்படுத்தி அதனை சார்ந்த திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கிட கேட்டுக் கொள்கிறோம் என்ற கோரிக்களை முன் வைத்தனர்.

இந்த கூட்டத்தில் எம்.எஸ்.. ராஜேந்திரன், சுந்தரராஜ், துரைராஜ், ராமசாமி, ஜெயப்பிரகாஷ், அழகுமுத்து, ராஜேந்திரன், மகேஷ் உள்ளிட்ட வட்டார, கிளை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!