Female death due to use of machinery in 100 day work program near Perambalur; Request for Rtd. judge-led inquiry!


பெரம்பலூர் மாவட்டம், திம்மூர் கிராமத்தில் கடந்த செப்.16 அன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிபுரிந்த சீனிவாசன் மனைவி ஜெயலட்சுமி என்பவர், அங்கு சட்டத்திற்கு மீறி விதிகளுக்கு புறம்பாக எந்திர பயன் பாட்டினால் டிராக்டர் மோதியதில் இறந்தார். இந்த சம்பவத்தை மறைக்க சம்தப்பட்ட அரசு அதிகாரிகள் முயற்சி செய்ததாகவும், இது குறித்து, அக்கிராம மக்கள் 17.9.2020 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவும் அளித்தனர்.

மேலும் இது தொடர்பாக செப்.19 அன்று விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திம்மூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால், எந்த நடவடிக்கையும், இல்லாததை கண்டித்து அதே சங்கம் சார்பில், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.

இதற்கு, விதொச மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில தலைவருமாகிய எ.லாசர் கண்டன உரையாற்றினார். மாநில செயலாளர் எம்.சின்னதுரை, மாவட்ட செயலாளர்கள் ஆர்.மணிவேல் (சிபிஎம்) குன்னம் சி.ராஜேந்திரன் (திமுக) , வீ.ஞானசேகரன் (சிபிஐ) ஆர்.துரைராஜ் (மதிமுக) என்.செல்லதுரை (விவசாயிகள் சங்கம்) ஆகியோர் சம்பவம் குறித்து விளக்கி பேசினர்.

பின்னா; செய்தியாளர்களிடம் வி.தொ.ச மாநிலத் தலைவர் ஏ.லாசர் அளித்த பேட்டி:

100 நாள் வேலை திட்டத்தில் எந்திரங்கள் பயன் படுத்தக்கூடாது என்பதையும் மீறி பயன்படுத்தியதால் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணமான ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் ஆகியேர் மீது கொலைவழக்காக பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு பயன் படுத்திய இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும், உயிர் பலியான ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது கணவருக்கு அரசு வேலை வழங்குவதோடு தாயை இழந்து வாடும் 2 குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம்
மனு அளித்து விளக்கம் கேட்க முயற்சி மேற்கொண்டோம். ஆனால் மக்கள் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க முடியாத கலெக்டராக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் உள்ளார். மேலும், தொலை பேசி வாயிலாக தெரிவிக்க முயற்சி செய்தோம். அதுவும் பயனளிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் இந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்காது என்பதே தெளிவாகிறது.

எனவே திம்மூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று உள்ளது. வேலை வழங்குவதற்கு முன்பே ரூ. 200 பெற்றுக் கொண்டு வேலை அட்டையை கொடுத்துள்ளனர். எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். உரிய விசாரணை நடத்தி நிவாரணம் வழங்காவிட்டால் அனைத்து ஜனநாயக அமைப்புகளுடன் சேர்ந்து விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதில் ஏராளமான பெண்கள், தங்களர் கைக்குழுந்தைகளுடன் நீண்ட நேரம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!