Female employee who was transferred to Perambalur without giving a Bribe to 3 day struggle! Accumulated compliments!

பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி சவிதா(34). இவருக்கு ஒரு மாற்றுத்திறனுடைய மகனும், மகளும் உள்ளனர்.

ஆலத்தூர் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றிய சவிதா, சிறுகன்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கடந்த இரண்டரை வருடமாக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 8 மாதத்திற்கு முன்பு தற்காலிக பணியிட (டெப்டேஷன்) மாறுதலில் அவரது சொந்த ஊரான இரூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள தனக்கு, 20 கிலோ மீட்டர் சென்று வருவது மிகவும் சிரமமாக இருப்பதால், தற்போது பணியாற்றி வரும் இரூர் கிராமத்திலேயே (காலியாக உள்ள) நிரந்தர பணியிட மாறுதல் வழங்கிட வேண்டுமென கடந்த ஒன்னரை வருடமாக அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் (கவனிப்பு இல்லாததால்) எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் நிறுத்தி, கடந்த 21ந்தேதி இரவு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கண்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சவிதாவை தடுத்து நிறுத்தி நாளை காலை வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் 22ந்தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் வந்த சவீதா கலெக்டர் அலுவலக 2வது மாடியில் உள்ள சத்துணவு அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அரசு அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் சவிதாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

இதனால் மன வேதனை அடைந்த சவீதா தனக்கு பணியிட மாறுதலுக்கான உத்தரவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என உணவு எதுவும் எடுத்து கொள்ளாமல் பசியோடு காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி சரக டிஐஜி மற்றும் மாதர் சங்கம் உள்ளிட்ட பெரம்பலூர் மகளிர் காவல் நிலைய போலீசார் சவீதாவிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, நாளை காலை வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு, பாதுகாப்பாக வீட்டிற்கு சென்றார்.

இதனைத்தொடர்ந்து நேற்று 23ந்தேதி காலை ஆட்சியர் அலுவலகம் வந்த சவிதாவை பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது, நீங்கள் வந்திருக்கும் தகவலை அதிகாரிகளிடம் தெரிக்கிறோம் என நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்க வைத்தனர்.

இன்று போய் நாளை வா! இன்று போய் நாளை வா!! கதையாகி வருகிறதே என மேலும் மனவேதனை அடைந்த சவிதா, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு தீர்வு கிடைக்காததால், தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி விட்டு, நேற்று மாலை சென்னை நோக்கி தனது இரண்டு பிள்ளைகளுடன் காரில் புறப்பட்டார்.

இதனையறிந்த காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் சவிதாவின் காரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மூலம் தடுத்து நிறுத்தி, சென்னை செல்வதால் உங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

இதனிடையே சவிதாவின் போராட்டத்திற்கு ஃபேஷ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரித்து வந்ததோடு, பணியிட மாறுதல் வழங்காத ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை கடுமையாக விமர்ச்சித்தனர்.

இதனிடையே அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவிதாவிடம் 3 மணி நேர காத்திருப்புக்கு பின்னர், இரூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்கியதற்கான உத்தரவு நகலை இரவு 9.46 மணிக்கு அலுவலக பணியாளர் ஒருவர் மூலம் வழங்கி வேறு வழியில்லாமல் மூன்று நாள் போராட்டத்திற்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

உத்தரவு நகலை பெற்றுக்கொண்ட சவிதா தனது போராட்டத்தை கைவிட்டு, ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு, நிம்மதியுடன்
வீடு திரும்பினர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும், அதிகாரிகளின் தொடர் அழைக்கழிப்பை கண்டு துவண்டு விடாமல், விடா முயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும், கடந்த மூன்று நாட்களாக இரவு, பகல் என தொடர்ந்து போராடி ஒரு பைசா கூட கையூட்டு தராமல் பணியிட மாறுதல் பெற்ற சத்துணவு ஊழியர் சவிதாவிற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரின் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சத்துணவுத்துறையில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கிய பின்னர் தான் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு இருந்தும், கலந்தாய்வு நடத்தாமல், உள் நோக்கத்தோடு, இன்று 24ந்தேதி வெளியிட வேண்டிய காலி பணியிட அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னர் 22ந்தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அவசர கதியில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு துறையிலுள்ள 40 அமைப்பாளர், 42 சமையலர், 60 உதவியாளர் உள்ளிட்ட 142 காலிப்பணியிடங்களுக்கும் பெரும் தொகை கையூட்டுப் பெறுவதற்காகத்தான் என்றும், சவிதா பணியிட மாறுதல் கேட்கும் அமைப்பாளர் பணியிடத்திற்கு 6 முதல் 8 லட்சம் வரை பலர் போட்டி போட்டு கொண்டு, கொடுக்க தயாராக உள்ள நிலையில் அந்த இடத்திற்கு எந்த வித அஜஸ்மெண்ட்டும் இல்லாமல் இலவசமாக எப்படி உத்தரவிடுவார்கள் என விபரம் அறிந்த சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் குற்றம் சாட்டுடன் விளக்கமளித்தனர்.

கோட்டையை நோக்கி சவிதா புறப்பட்டதும், 3 நட்களாக அலட்சியம் காட்டி அலைகழித்து வந்த அதிகாரிகள் அலறி அடித்து கொண்டு, போலீசாரை வைத்து தடுத்து நிறுத்தி 3 மணி நேரத்தில் பணியிட மாறுதல் உத்தரவு ஆணையை இப்போது மட்டும் எப்படி வழங்கினார்கள் என்பது தான் எல்லோருடைய கேள்வியும்? சுதந்திர நாட்டில் உரிமையை கூட போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் வருமானத்திற்கு மீறி கோடி கணக்கில் சொத்துக்களை சேர்த்து வருகின்றனர். அதோடு கோயம்புத்தூர், சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்கள் அருகே பள்ளிகள், அபார்ட்மெண்டுகள், எஸ்டேட்டுகள் வாங்கி குவித்து வருவதும் தற்போது தெரிய வந்துள்ளது. இதெல்லாம் வருமானவரித்துறை , சி.பிஐக்கு தெரியாதா? இல்லை! இதற்கு அவர்களும் உடந்தையா!! என பொதுமக்கள் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

நாட்டை மாறி மாறி வழிப்பறி கொள்ளையடிக்கும் அதிகாரிகளுக்கு பதில் இந்த நாட்டை வெள்ளையர்களே ஆண்டு இருக்கலாம் என்ற எண்ணம் மக்களிடையே உலவி வருகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!