Fever! The public should examine the state hospital: Namakkal Collector
நாமக்கல் : பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகராட்சி, 38வது வார்டு கொண்டிசெட்டிப்பட்டி, அருந்ததியர் தெரு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்றும், முறையாக மூடி பயன்படுத்தப்படுகின்றனவா என்றும், குப்பைகள் அகற்றப்பட்டு இருக்கின்றதா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் டெங்கு கொசுக்களை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, உருவாகமல் தடுக்கும் முறைகள் குறித்து பெண்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் போதுமான அளவு கலக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதனை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்கள் நன்னீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து உற்பத்தியாகும். ஏடிஸ் கொசுக்கள் அதிக தூரம் பறக்க முடியாதவை என்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் குறைவதால் முறையாக சிகிச்சை செய்யாவிட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தட்டணுக்களை பாணீசோதிக்கும் செல் கவுன்ட்டர் இயந்திரங்களை வழங்கியுள்ளது. மேலும், தொடர் சிகிச்சை வழங்குவதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றது.
ஏதேனும் காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ, அரசு மருத்துவமனைகளுக்கோ சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
மழைக்காலங்களில் மழை நீர் வீடுகளின் மேற்பகுதிகளிலும், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்குவதாலும், வீடுகளில் குடிதண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்காமல் இருப்பதாலும் டெங்கு கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு உற்பத்தியாகின்றன.
நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏடிஸ் கொசுக்கள் உருவாகமல் தடுக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
குடிதண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களை மூடி பயன்படுத்தவும், பயன்படுத்தாமல் உள்ள பொருட்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கவும், வீடுகளின் மேற்பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் சுத்தம் செய்யவும் வீடு வீடாக சென்று அறிவுறுத்தப்படுகின்றது.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரப் பணியாளர்கள் வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும்போது பிளாஸ்டிக் குப்பைகள் தனியாகவும், மக்கும் குப்பைகள் தனியாகவும் பிரித்து வாங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது நாமக்கல் நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன் மற்றும் சுகாதார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.