fraud at ATM: Money laundering complaint lodged with Perambalur police!
பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,ல் ஏடிஎம் ஐ மாற்றி கொடுத்து நூதன முறையில் 30 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த டிப் டாப் ஆசாமியை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள புது நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 47), இவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தனது ஏடிஎம் கார்டை மருமகன் பாலமுருகனிடம் கொடுத்து பொங்கல் செலவிற்காக (சீர் செய்ய) பணம் எடுத்து வர கூறியுள்ளார்.
இதனையடுத்து ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டு பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள எஸ்பிஐ.,வங்கி கிளையின் முன்பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் சென்ற பாலமுருகன் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது பாலமுருகனின் பின்னால் நின்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க, பேண்ட் சர்ட் அணிந்திருந்த, டிப்டாப் ஆசாமி ஒருவர் பாலமுருகனின் ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து கவனத்தை திசை திருப்பி, பணம் வரவில்லை என ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்தூ பணம் வராததால், பழைய பேருந்து நிலையம் கல்யாண் நகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் மற்றொரு கிளைக்கு சென்று அங்குள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சித்த போது ஏடிஎம் பின்கோடு தவறு என வந்துள்ளது.
இத்தகவலை தனது மாமனார் பாலகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பாலகிருஷ்ணன் சரியான பின் கோடு தான் உன்னிடம் தெரிவித்தேன் எதற்கும் கார்டில் யார் பெயர் உள்ளது என கேட்டுள்ளார்.
கார்டில் வேறு ஒருவரது பெயர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், அத்தகவலை மாமனாரிடம் தெரிவித்ததும், அவர் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டை தடை செய்ய முயற்சித்துள்ளார்.
வாடிக்கையாளர் சேவை மைய இணைப்பில் ஒன்றை அழுத்துக, இரண்டை அழுத்துக, மூன்றை அழுத்துக, நான்கை அழுத்துக என கூறியதால் குழப்பமடைந்து போனை கட் செய்த பாலகிருஷ்ணன் நேரடியாக புறப்பட்டு வெங்கடேசபுரம் எஸ்பிஐ வங்கி கிளைக்கு சென்று மேலாளரை சந்தித்து நடந்தவற்றை கூறி கார்டை பிளாக் செய்யும்படி கேட்டுள்ளார்.
இதனையடுத்து பாலகிருஷ்ணனிடம் கார்டை பிளாக் செய்து, கணக்கை ஆராய்ந்த போது இடைப்பட்ட நேரத்தில் 30 ஆயிரம் ரூபாயை பாலகிருஷ்ணனின் ஏடிஎம் மூலம் பேண்ட் ஷர்ட் அணிந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் எடுத்தது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் சிசிடிவி காட்சிகளுடன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான பெரம்பலூர் போலீசார் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த டிப்டாப் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாதம் முழுவதும், வேலை செய்து பொங்கல் செலவிற்காக வைத்திருந்த பணம் நூதன முறையில் மோசடி போனது பாலகிருஷ்ணனை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதேபோன்று, பெரம்பலூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், காவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோரிடம் டிப்டாப் ஆசாமிகள் உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து, நூதன முறையில் பணத்தை அபகரிக்கும் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதனை போலீசார் கவனத்தில் கொண்டு, குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துகடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.