Free saplings for farmers who register on Phuvan app; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு நீடித்த விவசாய நிலத்தில் பசுமை போர்வை இயக்கம் 2022-23 கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம் செய்ய அனைத்து வட்டாரங்களுக்கும் மரக்கன்றுகள் இறக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழக அரசு பண்ணை நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்திட தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு இத்திட்டத்தில் செம்மரம், செஞ்சந்தனம், மகோகனி, பூவரசு மற்றும் வேங்கை ஆகிய 1,65,000 மரக்கன்றுகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 100 சதவீத மானியத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடவு செய்வதாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 160 மரக்கன்றுகளும், அடர் நடவு செய்வதாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்படும்.

விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவசாயி தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவார் பின்னர் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகள் தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இலவசமாக பெற்று நடவு செய்யலாம். முன்னுரிமை அடிப்படையில் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

எனவே, மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு மரக்கன்றுகள் பெற்று பயன்பெறலாம். விவசாயிகள் மேலும் விவரம் பெறுவதற்கு தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர்களை கைப்பேசி மற்றும் நேரில் சென்று தெரிந்து கொள்ளவும்.

வேளாண்மை உதவி இயக்குநர், பெரம்பலூர் கைப்பேசி எண் 98256 31615, வேளாண்மை உதவி இயக்குநர் ஆலத்தூர் 94430 26763, வேளாண்மை உதவி இயக்குநர், வேப்பூர் 95009 36038, வேளாண்மை உதவி இயக்குநர், வேப்பந்தட்டை 80567 82946 இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!