Free training camps on composting and processing of plants in Namakkal
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ள தகவல்:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 27ம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு தாவரக் கழிவுகளை மட்கு உரமாக்குதல் பற்றிய தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சியில் மண் பரிசோதனையின் முக்கியத்துவங்கள், மண்வள மேம்பாட்டை அதிகரிக்கும் வழிமுறைகள், வேளாண்மையில் வெளிவரும் கழிவுகள் பற்றிய விபரங்கள், தாவரக்கழிவுகளை மட்கு உரமாக்குதல் பற்றிய குறிப்புகள், வேஸ்ட் டீகம்போசர் தயாரிக்கும் முறைகள் பற்றிய விரிவான விளக்க உரைகளும் மற்றும் செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.
விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 27ம் தேதி காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.