Freeze the Job Guarantee scheme: Rs 25,000 Cr. is needed! PMK Founder Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ளள அறிக்கை :

இந்தியாவில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றாக திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நிதிப்பற்றாக்குறையால் முடங்கிக் கிடக்கிறது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 99% இப்போதே தீர்ந்து விட்டதால், அடுத்த 3 மாதங்களுக்கு ஊரக மக்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பது பெரும் குறையாக இருந்தாலும், கிராமங்களில் வாழும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றாக திகழ்வது இத்திட்டம் தான். இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுவதால், அக்குடும்பத்தின் வருவாய் தேவைகள் ஓரளவுக்கு நிறைவேற்றப்படுகின்றன. இத்திட்டத்திற்காக 2018-19 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வேறு வழிகளில் கிடைத்த நிதியையும் சேர்த்து இத்திட்டத்திற்கு ரூ.59,032 கோடி கிடைத்தது. இதில் 2018-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம் தேதி வரை ரூ.58,701 கோடி செலவழிக்கப்பட்டு விட்ட நிலையில் ரூ.331 கோடி மட்டுமே இருப்பு உள்ளது. இதைக் கொண்டு ஒரு நாள் மட்டுமே வேலை வழங்க முடியும்.

2017-18 ஆம் நிதியாண்டில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பை விட நடப்பாண்டில் 32% குறைவாகவே வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அளவுக்கு நடப்பாண்டிலும் இந்தத் திட்டத்தின்படி மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.76,131 கோடி நிதி தேவை. இது நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.55,000 கோடியில் 38.42% ஆகும். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டும் தான் மக்களுக்கு ஓரளவாவது வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.

தேசிய அளவிலான நிலைமை இவ்வாறு இருந்தால் தமிழகத்தின் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. நடப்பாண்டில் வேலை உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.4011.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மாநில அரசின் பங்களிப்பையும் சேர்த்து இந்தத் திட்டத்திற்கான நிதி ரூ.4138.14 கோடியாக உயர்ந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் திசம்பர் மாதம் வரையிலான காலத்தில் ரூ.3999.09 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இது இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 96.64 விழுக்காடு ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 70 லட்சம் பேருக்கு இந்தத் திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படுகிறது.

எனினும், இவர்களில் 10,724 குடும்பங்களுக்கு மட்டும் தான் 100 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 33.34 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. இது இத்திட்டப்படி வழங்கப்பட வேண்டிய வேலைவாய்ப்பு இலக்கில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான். அனைத்துக் குடும்பங்களுக்கும் முழு அளவில் வேலை வழங்க தமிழகத்திற்கு இப்போது ஒதுக்கப்பட்ட நிதியை விட, இன்னும் இரு மடங்கு கூடுதல் நிதி தேவை. தேசிய அளவில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 42.13 நாட்கள் வேலை வழங்கப்படுள்ள நிலையில், தமிழகத்தில் அதை விட 27% குறைவாகவே வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப்படி தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக குறைக்கப்பட்டது தான்.

2017-18 ஆம் ஆண்டில் வேலை உறுதித் திட்டத்தின்படி மத்திய அரசு ரூ.5831.66 கோடி நிதி வழங்கியது. மாநில அரசின் பங்கு, பிற ஆதாரங்களில் இருந்து கிடைத்த நிதி ஆகியவற்றையும் சேர்த்து தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.6629.32 கோடி கிடைத்தது. ஆனால், நடப்பாண்டில் இதுவரை ரூ.4138.13 கோடி மட்டும் தான் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2491.19 கோடி குறைவு ஆகும். அதனால் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தமிழகத்திலுள்ள குடும்பங்களுக்கு சராசரியாக 8 நாட்கள் குறைவாகவே வேலை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இனிவரும் 3 மாதங்களுக்கு வேளாண்மை சார்ந்த பணிகள் இருக்காது என்பதால் உழவுத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது. அவர்களுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி கஜா புயல் பாதித்த பகுதிகளில் 150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், ரூ.138 கோடி மட்டுமே நிதி உள்ளது.

வேலை உறுதித் திட்டம் முடங்கிக் கிடப்பதற்கு காரணம் இத்திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காதது தான். கடந்த ஆண்டில் இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு, பின்னர் கூடுதலாக ரூ.7000 கோடி ஒதுக்கியது. கடந்த ஆண்டு மொத்தமாக ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஒதுக்கிய தொகையைத் தான் மத்திய அரசு இப்போதும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது போதுமானதல்ல என்பதால், இத்திட்டத்திற்காக மத்திய அரசு கூடுதலாக ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும். அதில் பெரும்பகுதி கஜா புயல் பாதித்த தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!