Ganesha Chaturthi Festival; Action against violators of the rules; Perambalur Collector!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவது குறித்து அரசின் விதிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் கலெக்டர் ஆபிசில் நடைபெற்றது

30.08.2021 அன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு அரசின் தீவிர பரிசீலனைக்குப்பின், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 15.09.2021 வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களின்போது சில கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்று அரசு ஆணையிட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதச்சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் அதிக கூட்டம் கூடி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும் அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது. தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை அருகிலுள்ள ஆலயங்களின் வெளிப்புறத்திலோ / சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சமூக இடைவெளியுடன் இருத்தல், வீட்டை விட்டுவெளியில் வந்தால் முகக்கவசம் அணிதல், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல் போன்ற அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். சிலைகளை கரைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருக்க, மேற்காணும் கட்டுப்பாடுகள் முழுமையாக பின்பற்றப்படுவதை அனைத்து சார்நிலை அலுவலர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும், என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியபிரகாசம், சப்-கலெக்டர் நிறைமதி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் பாரதிதாசன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!