General Change Conference for Teachers to Complete in May: Post Graduate Teachers Association Request
நாமக்கல் : தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை மே மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து சங்க மாநிலத் தலைவர் நாமக்கல் ராமு மற்றும் நிர்வாகிகள் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவை சென்னையில் நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
வரும் கல்வி ஆண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வை 2 அல்லது 3 வாரங்களில் நடத்தி முடிக்க வேண்டும். இதன் மூலம் விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கப்பட்டு விரைவாக முடிக்கப்படும். விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தவுடன் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு உழைப்பூதியம் வழங்க வேண்டும்.
மேலும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வை மே மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் தேர்வுப்பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களாக மூத்த முதுகலை ஆசிரியர்களையும் வரும் கல்வி ஆண்டில் நடைபெறும் தேர்வின் போது ஈடுபடுத்த வேண்டும். மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.