Geo Park Museum near Perambalur: Rs. Minister Sivashankar started the construction works worth 7.89 crores!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லுயிர் புதைபடிமங்களை பாதுகாக்கும் வகையில், தொல்லுயிர் புதை படிமங்கள் அமைந்துள்ள பகுதியை சுற்றி ரூ.7.89 கோடி மதிப்பில் முள்வேலி அமைத்தல், அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம் மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆகியவை கட்டும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலெக்டர் கற்பகம் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம், நாரணமங்கலம் முதல் வரகுபாடி வழியாக சிறுகன்பூர் வரை ரூ.151 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும், மருதையான் கோவில் முதல் கீழமாத்தூர் வரையிலும் ரூ.76.15 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும், கொளத்துார் முதல் அருணகிரிமங்கலம் வரை ரூ.161 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும், மேலமாத்தூர் முதல் இலந்தங்குழி வரை ரூ.162 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் என மொத்தம் ரூ.5.50 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும், தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் புதைபடிம பூங்கா அமைக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்ததன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை கிராமத்தில் தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றி முள்வேலி அமைத்தல் மற்றும் அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம், மேல்நிலைத் தொட்டி கட்டுதல் பணி உள்ளிட்ட பணிகள் ரூ.7.89 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளும் வகையிலான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் அருங்காட்சியகம் 436 சதுர மீட்டர் பரப்பளவிலும், பாதுகாவலர் அறை மற்றும் கண்காணிப்பு கோபுரம் 269 சதுர மீட்டர் பரப்பளவிலும், பாதுகாப்பு முள் வேலி 16,000 சதுர மீட்டர் பரப்பளவிலும் அமைக்கப்படவுள்ளது.

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக கடல் கொண்ட பூமியாக இருந்த பெரம்பலூர் மாவட்டம் தொல்லுயிர் எச்சங்களின் பெரிய நிலப்பரப்பாக திகழ்கிறது. தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் புவியியல் ரீதியாக இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இந்த பணி பெரிய முன்னெடுப்பாக அமையும். அருகிலுள்ள சாத்தனூர் கல்மரப் பூங்கா தற்போது சுற்றுலா தளமாக மாறி வருவதை போல எதிர்காலத்தில் இந்த காரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவும் சுற்றுலா தளமாக மாற வாய்ப்புள்ளது.

இந்த பணியினை தொடர்ந்து இன்னும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது உலகளவிலிருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு ஆய்வு செய்யும் வகையில் பயன்படுவதோடு சுற்றுலா தலமாகவும் மேம்படுத்தப்படும், என தெரிவித்தார்.

ஆலத்தூர் யூனியன் சேர்மனும், ஒன்றிய செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி, கொளக்காநத்தம் ஊராட்சி தலைவைர் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!