Gokulraj Mother The appointment of a special prosecutor to Appoint the petition to the Namakkal Collector
நாமக்கல் : சிறப்பு வழக்கறிஞரை நியமனம் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் நியமன உத்தரவை ஆட்சியர் விரைந்து வழங்க வேண்டும் என கோகுல்ராஜ் தாய் மற்றும் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பான விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் கோகுல்ராஜ் தாய் சித்ரா, தனது தரப்பில் ஆஜராக பவானியைச் சேர்ந்த வக்கீல் மோகன் என்பவரை நியமனம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரரான சித்ரா தரப்புக்கு சிறப்பு வக்கீலாக மோகனை நியமித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சிறப்பு வக்கீல் நியமனம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிடுவார். அதன் பிறகு சித்ரா தரப்புக்கு மோகன் ஆஜராவார். இந் நிலையில் கோகுல்ராஜ் தாய் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன் ஆகியோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.
அதில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி வக்கீல் மோகனை தங்கள் தரப்புக்கு அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமித்து ஆட்சியர் விரைந்து உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.