அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவில் பிழை : திருத்தம் கோரியவரை ஆண்டுகணக்காக அலைகழித்ததால் மனமுடைந்த வாலிபர் வட்டாசியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்( வயது 36), இவரது தாத்தாவிற்கு கடந்த 1963ஆம் ஆண்டு அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுமனையில் சுரேஷ் வீடுகட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது, அந்த இடம் அரசு பள்ளிக்கு சொத்தமான இடம் என்று தவறுதலாக வருவாய்த்துறையின் கோப்புகளில் பதிவேற்றம் செய்து விட்டதாக தெரிகிறது.
இதனை அறிந்த சுரேஷ் சம்மந்தப்பட்ட வீட்டுமனை தனக்கு சொந்தமானது என திருத்தம் செய்து தர வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு அளித்தும் திருத்தம் செய்து தராமல் கடந்த 13 ஆண்டுகளாக வருவாய்த்துறையினர் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த சுரேஷ் தனது கோரிக்கையை பல முறை மனுவாக அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லாததால் மனமுடைந்த சுரேஷ், வட்டாட்சியர் அலுவலக வாசலில் நின்று தனது கழுத்தில் மாலை அணிந்து கொண்டு, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அப்பூது அங்கே மயங்கி விழுந்தார்.
இதனால், ஆலத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுரேஷ் விஷம் குடித்த தகவலறிந்து அதிர்ச்சியடைந்த தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களின் அறையை விட்டு வெளியே ஓடி வந்து சுரேஷை மீட்டு அரசு காரில் அழைத்துச் சென்று காரை கிராமத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளின் தவறான பதிவேற்றத்தை திருத்தம் செய்ய வலியுறுத்தி வருடக்கணக்கில் அழைக்கழிக்கப்பட்ட விவசாய கூலித்தொழிலாளி ஒருவர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.