Government subsidies for traditional farming; Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நிலையான உற்பத்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, இயற்கை வள பாதுகாப்பு மற்றும் மண்வள ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக இந்திய அரசு பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக 200 எக்டேர் மற்றும் தனி விவசாயிகளுக்கு என 160 எக்டேர் ஆக மொத்தம் 360 எக்டேரில் செயல்படுத்தப்படவுள்ளது. பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெற ஒரு கிராமத்தை சேர்ந்த அல்லது அருகிலுள்ள 2-3 கிராமத்திலுள்ள, குறைந்தது 20 விவசாயிகள் சேர்ந்து 20 எக்டேர் கொண்ட தொகுப்பினை உருவாக்கி பாரம்பரிய விவசாயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இத்திட்டத்தில் ஒரு எக்டேருக்கு முதலாம் ஆண்டு ரூ.16,500 இரண்டாம் ஆண்டு ரூ.17,000 மற்றும் மூன்றாம் ஆண்டு ரூ.16,500 என மொத்தம் ஒரு எக்டேருக்கு ரூ.50,000 மானியம் வழங்கப்படும்.
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் மற்றொரு துணை திட்டமாக ஏற்கனவே பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தனி விவசாயிகள், குழுவாக சேர்ந்து பயன்பெற இயலாத பட்சத்தில் இவ்விவசாயிகள் வேறு எந்த திட்டத்திலும் பயன்பெறாத பாரம்பரிய விவசாயிகளுக்கு பதிவு கட்டணமாக இத்திட்டத்தில் ஒரு எக்டேருக்கு முதலாம் ஆண்டு ரூ.2,000 இரண்டாம் ஆண்டு ரூ.2,000 மற்றும் மூன்றாம் ஆண்டு ரூ.2,000 என மொத்தம் ஒரு எக்டேருக்கு ரூ.6,000 மானியம் வழங்கப்படும்.
பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தில் குழுவாக சேர்ந்து பயன்பெறும் விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு முதல் ஆண்டில் குழுவினை உருவாக்கிட ரூ.1,000மமும், குழுவின் தகவல் சேகரித்து பராமரித்திட ரூ.1,500ம், மண்டல ஆலோசனை மற்றும் பதிவு கட்டணமாக ரூ.700ம், பாரம்பரிய விவசாயம் செய்திட ஊக்கத்தொகை ரூ.12,000மும் மற்றும் விளம்பர செலவினங்கள் ரூ.1300ம் என மொத்தம் ஒரு எக்டேருக்கு முதலாம் ஆண்டு ரூ.16,500 மானியம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.