Governor House report: Nakkeran Gopal was arrested by the release of the file: court
ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை விடுவித்து சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்று காலை புனே செல்ல சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் வாரம் இருமுறை இதழ் ஆசிரியர் கோபாலை திருவல்லிக்கேணி உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மேலும் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124இன் கீழ் ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை முடிக்கப்பட்டு அல்லிக்குளம் எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்தினர்.
அப்போது விசாரணையில் அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் கூறியதாக நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நக்கீரன் கோபாலை இந்திய தண்டனைச் சட்டம் 124இன் கீழ் கைது செய்திருப்பது செல்லாது. இந்த சட்டப் பிரிவில் ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுவதற்கு முகாந்திரம் இல்லை. அதேபோல் ஆளுநர் தன்னுடைய புகாரில், கோபால் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரவில்லை.
இத்தகைய வழக்குகளில் கைது செய்வது என்பது தவறான முன்னுதாரணம் ஆகி விடும். இந்த வழக்கிற்கும் குறிப்பிட்ட சட்டப் பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே கோபாலை நீதிமன்ற காவலின் கீழ் சிறைக்கு அனுப்புமாறு உத்தரவிட முடியாது. இவ்வாறு தெரிவித்த நீதிபதி கோபிநாத் நக்கீரன் கோபாலை விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலைக்குப் பின்னர் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நக்கீரன் கோபால் தனது விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். முன்னதாக இந்து நாளேட்டின் ஆசிரியர் இந்து என்.ராம் வழக்கிற்கு வாதடினார். வைகோ, காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினார். மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். மேலும், பல்வேறு முக்கிய கட்சியினர், பத்திரிக்கை சங்கத்தினர் நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.