
Governor’s speech: disappointment, pongal gift given! VaiKo
மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை:
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை, மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் தமிழக மக்களுக்குப் ‘பொங்கல் பரிசாக’த் தந்திருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு ‘கஜா’ புயலால் ஏற்பட்டு, காவிரி டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து நிர்க்கதிக்கு ஆளாகி விட்டனர். தமிழக அரசு அறிவித்த உதவிகள் தற்காலிகமாகக் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன் அளிக்கவில்லை. வீடுகளை இழந்த மக்களுக்கும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் வளர்க்கப்பட்டிருந்த தென்னை மரங்கள் முறிந்து, வாழ்வையே தொலைத்து விட்ட விவசாயிகளுக்கும், மா, பலா, வாழை, சவுக்கு உள்ளிட்ட மரங்களை இழந்தவர்கள், நெற்பயிர் சாகுபடி முழுமையாக அழிந்து வேதனைப்படுவோர் உள்ளிட்ட எவருக்கும் நிரந்தர மீள் வாழ்வுக்கு ஆளுநர் உரையில் எந்தச் செயல்திட்டமும் அறிவிக்கப்படாதது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கின்றது.
காவிரிப் பாசனப் பகுதிகளை நாசமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்பந்தங்கள் போட்டு வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பணி ஆணை வழங்கி உள்ள நிலையில் அது குறித்து அ.இ.அ.தி.மு.க., அரசு துளி கூட கவலைப்படாதது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது ஆகும். நாகை, கடலூர் மாவட்டங்களைப் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக மாற்ற வெளியிட்டுள்ள அறிவிப்பைத் திரும்பப் பெறவும் ஆளுநர் உரையில் உறுதி கூறப்படவில்லை.
கர்நாடக மாநில அரசு, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அளித்த செயல்திட்ட ஆய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு ஆளுநர் உரையில் கொள்கை முடிவை அறிவிக்காமல், ‘தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்’ என்று கூறி இருப்பது எடப்பாடி அரசின் இரட்டை வேடத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் ‘நீட்’ தேர்வுக்கு விதிவிலக்கு போன்றவற்றில் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதத் திடடங்களுக்கு அ.இ.அ.தி.மு.க., அரசு துணைபோய் கொண்டிருப்பதை ஆளுநர் உரை உறுதி செய்கிறது.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள 2,000 கோடி ரூபாய் தொகையைச் சர்க்கரை ஆலைகளிடமிருந்து பெற்றுத் தரவோ, கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ. 4,000 என நிர்ணயிக்கக் கோரிய விவசாயிகளின் வேண்டுகோளைக் கவனிக்கவோ எடப்பாடி அரசு தயாராக இல்லை என்பதை ஆளுநர் உரை சுட்டிக் காட்டுகிறது.
தொழில்துறை குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வழக்கம்போல் ஏட்டுச் சுரைக்காய்தான்; ஏனெனில் கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் ஜப்பான் நாட்டு உதவியுடன் 4 தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இருப்பதுடன், இதுவரையில் அது செயல்பாட்டுக்கு வரவில்லை.
கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி மத்திய அமைச்சரவையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை, 2018 செயற்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரியமாக கடற்கரையில் வாழும் மீனவ மக்களை வெளியேற்றவும். கடற்கரைப் பகுதிகளை வணிக நோக்கங்களுக்காகப் பன்னாட்டு, உள்நாட்டுப் பெரு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கவும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முடிவு எடுத்துள்ளது; தமிழக அரசு இதுகுறித்து அக்கறையின்றி மாநில உரிமைகளையும் காவு கொடுத்து வருகின்றது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்டவை பற்றியோ, கிராம நிர்வாக அலுவலர்கள், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்தோ ஆளுநர் உரையில் எதுவும் இடம் பெறவில்லை.
சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்று எடப்பாடி அரசு தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதைப் பார்த்து மக்களிடம் கொந்தளிப்புதான் ஏற்படும்.
மக்கள் நலனில் அக்கறையற்ற மாநில உரிமைகளை நசுக்கி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிபணிந்து கிடக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் செயலற்ற தன்மையையே இந்த ஆளுநர் உரை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது, என தெரிவித்துள்ளார்.