Grinding work of Perambalur Sugar Mill; MLA Prabhakaran inaugurated!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் எறையூரில், அரசின் பொதுத்துறைக்கு சொந்தமான “பெரம்பலூர் சர்க்கரை ஆலை” உள்ளது. அரவைப் பணி தொடக்க விழா இன்று டி.ஆர்.ஓ வடிவேல்பிரபு தலைமையில் நடந்தது. பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் குன்னம் சி. ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நடப்பு அரவைப்பருவத்திற்கு 10,616 ஏக்கர் பதிவு கரும்பு பரப்பளவிலிருந்து 3.25 லட்சம் மெ.டன்கள் அளவிற்கு மகசூல் எதிர்பார்க்கப்பட்டு ஆலை அரவை மேற்கொள்ளவும், 9.85% அளவிற்கு சராசரி சர்க்கரைக்கட்டுமானம் எடுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மொத்த மகசூல் மதிப்பீட்டு அளவான 3.25 லட்சம் மெ.டன் கரும்பளவில் சுமார் 10,000 மெ.டன் அளவிற்கு அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அவ்வாலைக்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலையிலிருந்து கரும்பு பரிமாற்றம் செய்யப்படவும் உள்ளது.

தினசரி ஆலை அரவை 3,000 மெ.டன் அளவிற்கு மேற்கொள்ளப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 110 நாட்கள் அளவிற்கு அரவை மேற்கொள்ளப்படவும், எதிர்வரும் 31-03-2024 அன்று ஆலை அரவை நிறுத்தம் செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பு அரவைப்பருவத்திற்கு கரும்புகளை வழங்கியுள்ள பதிவு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்பிற்கு ரூ.2968.87 வீதம் நியாயமான ஊதிய விலை (Fair Remunerative Price) வழங்கப்பட உள்ளது. நடப்பு அரவைப்பருவத்திற்கு கரும்பு எடைத் தளத்தில் ரூ.9.9 லட்சம் திட்ட மதிப்பீட்டளவில் தானியங்கி முறையும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர். ராஜசிதம்பரம், கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் மு.ஞானமூர்த்தி, வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் க. ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்கள் மாகாதேவி ஜெயபால், தழுதாழை பாஸ்கர், விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!