Highway toll increase should be postponed for one year! PMK Anbumani

பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, தருமபுரி உள்ளிட்ட 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணங்கள் குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்த்தப்படவிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்துத் தரப்பினரும் வருவாய் இழந்து தவிக்கும் நிலையில், சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்தியாவில் மொத்தமுள்ள 563 சுங்கச்சாவடிகளில் சுமார் 10 விழுக்காடு, அதாவது 48 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நடைமுறையின்படி இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, இப்போதுள்ள சூழலில் இந்த கட்டண உயர்வு ஏற்க முடியாதது.

ஒருபுறம் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் நேரடியாக சாலை பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்னொரு புறம் பெட்ரோல், டீசல் மீது சாலைக் கட்டமைப்பு வரி என்ற பெயரில் இன்னொரு வரி வசூலிக்கப்படுகிறது. இவை தவிர வாகனங்களை வாங்கும் போது சாலைவரி என்பது தனியாக வசூலிக்கப்படுகிறது. ஒரு சாலையை பயன்படுத்த 3 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

கடந்த மே மாதம் கலால்வரி உயர்த்தப்பட்ட பிறகு பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு 32.98 ரூபாயும், டீசல் மீது 31.83 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் தலா 18 ரூபாய் சாலை கட்டமைப்பு நிதிக்கு வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலில் ஒரு பேருந்து அல்லது சரக்குந்து 5 கி.மீ இயங்குவதாக வைத்துக் கொண்டால், ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ.3.60 எரிபொருள் மீதான வரியாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி சென்னையிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள மதுரைக்கு செல்வதாக இருந்தால், ஒரு சரக்குந்து 1,800 ரூபாயை எரிபொருள் வழியான சாலைவரியாக செலவழிக்க வேண்டி இருக்கும். அவ்வாறு இருக்கும் போது இன்னொருபுறம் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் வசூலிப்பதே அநீதியானது. அதுமட்டுமின்றி அந்தக் கட்டணத்தை ஆண்டு தோறும் உயர்த்துவது நியாயமே இல்லாதது.

சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கண்மூடித்தனமாக உயரக்கூடும். கொரோனா பரவல் அச்சத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கக்கட்டண உயர்வும், அதனால் ஏற்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கான சுங்கக்கட்டண உயர்வை குறைந்தது ஓராண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!