HIV infection in Namakkal district has been reduced by awareness & preventive measures: Collector information

விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாமக்கல் மாவட்டத்தில் எச்ஐவி பாதிப்பு குறைந்துள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உலக எச்ஐவி தடுப்பு மருந்து விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் எச்ஐவி தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் மற்றும் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட
ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் எச்ஐவி இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட நிர்வாகம் எச்ஐவிக்கான விழிப்புணர்வு பணிகள் மற்றும் சேவைகளை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மூலமாக அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்க கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் இலவசமாக எச்ஐவி பரிசோதனை செய்யப்படுகிறது என பேசினார்.

விழாவில் எஸ்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து ஏற்றுக்கொண்டனர். எச்ஐவி எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் எச்ஐவி எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வையினை ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சரஸ்வதி, காசநோய் பிரிவு துணை இயக்குநர் கணபதி, நாமக்கல் ஏஆர்டிமைய மருத்துவ அலுவலர் சுமதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் கார்த்திகேயன், மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட டாக்டர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!