Hold festivals, street vendors union meeting resolution Passed!
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் செல்வி தலைமை வகித்தார். மாநில கண்வீனர் பி.கருப்பையா, சிஐடியு மாநில செயலாளர் திருவேட்டை ஆகியோர் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினர். பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக கோயில் திருவிழாக்கள், பீச். மற்றும் பூங்காக்களுக்கு அனுமதிக்காததால் கடைபோடும் வியாபாரிகள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளதால் விதிமுறைகளை பின்பற்றி கோயில் திருவிழாக்கள் நடத்திடவும் திருவிழா கடை வியாபாரிகள் கடை நடத்திடவும் பீச், பூங்காக்களில் கடை போட அரசு அனுமத்திட வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நிர்வாகங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை காலாவதியாகிவிட்டதால் புதிய அடையாள அட்டை வழங்குவதோடு விடுபட்டுள்ளவர்களுக்கும் கணக்கெடுத்து வழங்க வேண்டும்.
பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதி திட்டத்திக் கீழ் அறிவித்த 10 ஆயிரம் கடன் தொகை அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமில்லாது சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும், சாலையோர வியாபாரிகள் கந்து வட்டி கொடுமையிலிருந்து விடுபட, கூட்டுறவு வங்கிகள் மூலம் வாரத் தவணையில் வட்டியில்லாமல் 15 ஆயிரம் வழங்கிட தேர்தல் அறிக்கையில் கூறியதை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி, போக்குவரத்து இடையூறு என பல காரணங்களை கூறி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல நகரங்களில் காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளாட்சி நிர்வாகங்கள் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்துவது, பொருட்களை பறிமுதல் செய்வது என்கிற நடவடிக்கையில் ஈடுபட்டுவது வியாபாரிகள் சட்டத்திற்கு விரோதமானதாகும், இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.சந்தியாகு பிச்சமுத்து, ரெங்கராஜ், குணசேகரன், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்அகஸ்டின், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் பி.ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.