பெரம்பலூர் அருகே வீட்டு வரி ரசீது வழங்காமல் அலைக்கழிக்கும் ஊராட்சியை கண்டித்து திருநங்கைகள் காத்திருப்பு போராட்டம்
சமுதாயத்தில் திருநங்கைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு , பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சியில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் தலா 300 சதுர அடியில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு, வீடில்லாத 19 திருநங்கைகள் தேர்வு செய்து, கடந்த ஜனவரி மாதம் 19 திருநங்கைகளுக்கும் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை.
மின் இணைப்பு கோரி பலமுறை மனு கொடுத்தும் அதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென கடந்த 8ந்தேதி கலெக்டரிடம் திருநங்கைகள் மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர். அதன் பேரில் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, திருநங்கைகளிடம் அழைத்து பேசி மின் இணைப்பு வழங்க, சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் வீட்டு வரி ரசீது வாங்கி வரும்படி கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து எளம்பலூர் ஊராட்சி மன்றத்திற்கு சென்ற திருநங்ககள் அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதையறிந்து, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரை செல்போனில் தொடர்பு கொண்ட விவரத்தை எடுத்து சொல்லி தங்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்கிட வேண்டுமென்று கேட்டுள்ளனர்.
வழங்குவதாக கூறி விட்டு செல்போனை துண்டித்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஒருவார காலமாக வீட்டு வரி ரசீது வழங்கவில்லை என தெரிகிறது. கேட்டால் அலுவலகத்திற்கு வாருங்கள் வாங்கி கொள்ளலாம் என தெரிவித்து போனை துண்டிப்பதோடு, ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் பூட்டி விட்டு சென்று விடுவதாகவும், திருநங்கைகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் இன்று ரசீது வாங்கி கொள்ளலாம் என ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்ற போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் ரசீது வழங்கும் வரை அங்கிருந்து போவதில்லை என ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டு வரி ரசீது பெற்றுத்தருவதாக சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
திருநங்கைகளின் இந்த திடீர் போராட்டத்தால் எளம்பலூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.