Housing for Sri Lankan Tamils; Perambalur Collector inspects construction work!

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் ரூ.3.60 கோடி மதிப்பில் இலங்கைத் தமிழர்களுக்கான நவீன வசதிகளுடனான 72 குடியிருப்புகள் கட்டும் பணியை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர், இலங்கையிலிருந்து கடல் கடந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு, பாதுகாப்பான, கௌரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தரப்படும் என 27.08.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்காக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் 1 தொகுப்பிற்கு 4 வீடுகள் வீதம் 72 வீடுகள் 18 தொகுப்புகளாக புதிதாக கட்டுவதற்கான பணிகள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரால் 18.11.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

தற்போது பெரும்பான்மையான பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் கலெக்டர் நேரில் சென்று. குடியிருப்புகளுக்கு முறையாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதா , தெரு விளக்குகள் மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார். பின்னர், அடிப்படை வசதிகளில் எந்தக் குறைபாடும் இல்லாத வகையில் முழுமையாக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது கவுள்பாளையம் ஊராட்சித் தலைவர் கலைச்செல்வன், ஊரக வளர்ச்சி முகமை பணியாளர்கள், மின்சார வாரிய உதவி பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் பிடிஓ அறிவழகன், தாசில்தார் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!