Humanitarian Weekend Celebration at Perambalur: MLA, R. Tamilselvan attended and presented gifts.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தந்தை ஹேன்ஸ் ரோவா; மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர். ஆர்.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். இந்த நிறைவு விழாவை முன்னிட்டு ஆதிதிராவிட நல பள்ளி மாணவ மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் நடனப் போட்டிகளில் வெற்றி பெற்ற களரம்பட்டி, ஆலம்பாடி, பாடலூர், ஈச்சம்பட்டி, ஒகளூர், லாடபுரம், நத்தக்காடு, பசும்பலூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஆதிதிராவிட நல பள்ளி மற்றும் விடுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர். தமிழ்ச்செல்வன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:

சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஜாதி, சமய வேறுபாடற்ற சமநிலையை அடையவேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சட்டத்தை இயற்றினார். இதன் மூலமாக அனைத்து தரப்பு மக்களும் அன்பை செலுத்தி வாழ்ந்திட வேண்டும் என்று போதித்தார். மேலும், தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக பல்வேறு வகையான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில் கல்வி உதவித்தொகைகள், வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு இலவசமாக வீட்டுமனைகள் வழங்கும் திட்டம், தொழிற்கல்வி பயின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார முன்னேற்றத்திற்காக இலவச தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டிகள், தச்சு கருவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, அரசாங்கத்தின் மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் மூலமாக வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

மனிதர்கள் பதவியினாலும், பணத்தாலும் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், அவர்களிடத்தில் மனிதநேயம் இல்லாவிட்டால் மற்றவர்கள் அவர்களை மதிக்கமாட்டார்கள். எனவே மாணவ, மாணவிகள் இந்த இளம் வயதிலேயே மனித நேயத்தை வளர்த்துக்கொண்டு, நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சிறந்த குடிமகனாக திகழ வேண்டும், என பேசினார்
.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டு தோறும் மனித நேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே மனித நேய உணர்வை வளர்க்கும் வகையில் மனித நேய வாரவிழா அனுசரிக்கப்படடு நிறைவு விழா சிறப்பாக நடைபெறுகிறது.

சாதி-மத பேதங்களை கடந்து, இனம்-மொழி என்ற பாகுபாடு இல்லாமல் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒருவருக் கொருவர் அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. மாணவ மாணவிகளாகிய நீங்கள் இதனை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் மனிதநேயமிக்க சமுதாயத்தை உருவாக்க உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.

ஆதிதிராவிட நல பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் மீனா அண்ணாதுரை, தனி வட்டாட்சியர் (ஆ.தி.ந) திரு.துரைராஜ், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியன், கண்காணிப்பாளர் சிவசண்முகம் உள்ளிட்ட அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!