பெரம்பலூர் நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் நோய்வாய்பட்ட நாய்கள், பூனைகள், ஆதரவற்ற குதிரைகள், வீட்டு விலங்குகளாக அங்கீகரிக்கப்டடாத குரங்குகள் நாள் தோறும் இரை கிடைக்காமல் பசி துடிக்கின்றன. மனிதன் மற்றவர்களை தொடர்பு கொண்டு கேட்டோ பிச்சை எடுத்து தனது பசியினை தணித்து கொள்வான்.
விலங்குகள் மனிதனிடம் பேசவோ கேட்டகவோ தெரியாது. விலங்குகள் பசியை போக்க பொருட்களை கவர வேண்டும், அல்லது சூறையிட வேண்டும். அது தற்போது நகரத்திலோ, புறநகர்ப் பகுதியிலோ நடக்காது என்பதால் விலங்குகள் தங்கள் பசி போக்கி கொள்ள வழி தெரியாமல் பசியுடன் பல மொட்டை மாடிகளிலும், வீட்டு திண்ணைகளிலும், வெறித்து பார்த்து கொண்டிருக்கின்றன.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் – குறள்
பிறப்பினால் மரம்,செடி,விலங்குகள், மனிதன் என்ற அனைத்து உயிர்களும் உலகில் பிறக்கும் போது ஒத்த தன்மையுடனேயே பிறக்கின்றன. இதில் வேற்றுமை பார்த்து பகைமை பாராட்டலாகாது என்கிறார் வள்ளுவர்.
புளூ கிராசு (இந்தியா) என்ற அமைப்பு விலங்குகளின் துயர் துடைப்பதற்காக கேப்டன் சுந்தரம் என்பவரால் 1959ஆம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு 1964ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கால்நடைத்துறை மற்றும் அரசு சார்பில் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடமாடும் மருந்தகங்கள், விலங்குகளின் கருத்தடை, விலங்குகள் தத்தெடுப்பு, பிற தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுதல், பிற புளு கிராசு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுதல், விலங்குகளுக்கு புகலிடங்கள் அளித்தல், வழி தவறி வரும் விலங்குகளை மீள்-குடியேற்றம் செய்தல், நோயாளர் ஊர்தி சேவைகள், மருத்துவக்கழிவு அகற்றல், மருத்துவமனைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்ய வேண்டும்.
துன்புறுத்தப்டும் விலங்குகளை காத்து, துன்புறுத்துவோர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப் படுத்த வேண்டும்.
மேலும், பள்ளி, கல்லூரிகளில் உயிரின சம நிலை குறித்து விளக்கம் அளிப்பது என்பதும் அடங்கும், இதற்காக கோடிக் கணக்கான ரூபாய் உலக அளவில் தன்னார்வலர்கள் நன்கொடையாக அளித்து வருகின்றனர்.
அது என்ன செய்யப்படுகிறது என்பதோடு மட்டுமில்லாமல் பெரம்பலூர் மாவட்டத்தில் புளூ கிராஸ் அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும் அச்சங்கத்தின் மாவட்ட தலைவரான ஆட்சியர் தெளிவு படுத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இரகசியமாக நடத்தப்பட்டு வரும் புளூ கிராஸ் அமைப்பை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகள் தெரிந்து கொள்ளும் வண்ணம் செயல்படுத்த வேண்டும்.
ஊரெங்கும் பசியால் வாடும் விலங்குகளுக்கு உணவு அல்லது அதற்கேற்ற இரை வழங்குவதோடு விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்க வேண்டும்.