If I win again, I will give free education to 1500 people: IJK candidate Parivendar!
பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு ஐஜேகே மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளரும், மாநில விளம்பர பிரிவு செயலாளருமான முத்தமிழ்செல்வன், பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் வக்கீல் அன்பு துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐஜேகே நிறுவன தலைவரும், வேட்பாளருமான பாரிவேந்தர் பேசுகையில்,
சென்ற எம்பி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி ஆண்டிற்கு 300 மாணவர்கள் வீதம் ஆயிரத்து 500 மாணவர்களுக்கு
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ரூ. 118 கோடி செலவில் இலவச கல்வி அளித்துள்ளேன்.
அதே போல் என்னை மீண்டும் ஜெயிக்க வைத்தால் மேலும் ஆயிரத்து 500 பேருக்கு இலவச கல்வி அளிப்பேன். பெரம்பலூர் மாவட்டத்திற்கு கனவாக இருந்த ரயில்வே திட்டத்திற்கு நான் எடுத்த முயற்சியின் பலனாக ஆய்வு நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான் மீண்டும் ஜெயித்தால் கட்டாயம் ரயில்வே போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்.
மேலும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர், சிறுகனூர், இருங்களூர் ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. லால்குடி பகுதியில் சிதம்பரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு சுரங்க பாதைகள் மற்றம் சர்வீஸ் ரோடுகள் அமைத்து தரப்பட்டது. மேலும் கரோனா பேரிடர் காலங்களில் ரூ 2.23 கோடி செலவில் உதவிகள் வழங்கியுள்ளேன்.
ஆன்மீகம் மற்றும் அறப்பணிகளுக்காக ரூ 4.80 கோடி மதிப்பிலான நிதி உதவி வழங்கியுள்ளேன். பள்ளிகள் மற்றும் கிராமங்களில் ஒரு கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் 10 கிராமங்களில் குடிநீர் பணிகளுக்கான சொந்த நிதியிலிருந்து ரூ.ஒரு கோடி வழங்கியுள்ளேன். இது போல் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனக்கு ஓட்டுப்போட்டு வெற்றிபெற வைத்தால் பல நல்ல திட்டங்களை கொண்டு வருவேன் என தெரிவித்தார்.
கூட்டத்தில் ஐஜேகே மாநில தலைவர் ரவிபச்சமுத்து, மாநில பொதுசெயலாளர் ஜெயசீலன், பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தமாகா மாநில கொள்ளை பரப்பு செயலாளர் காரை சுப்ரமணியன், மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், அமமுக மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஐஜேகே மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.