If the chickens grow in the cage, the farming industry is bleak: ban farmers request

கோழிகள் கூண்டில் அடைத்து வளர்க்க நிரந்தரமாக தடை செய்யப்பட்டால் கோழிப்பண்ணைத் தொழில் நலிவடையும் தடையை நீக்க கோழிப்பண்ணையாளர்கள் வேண்டுகோள்

நாமக்கல் : கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க தடை செய்யப்பட்டால் இந்தியாவில் ஒரு முட்டையின் விலை ரூ.15 ஆக உயரும் என்றும் கோழிப்பண்ணைத் தொழில் முழுமையாக நலிவடையும் என்றும் தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோழிப்பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்துக்கு மாற்றாக கோழிப்பண்ணைத் தொழில் தொடங்கப்பட்டஉ இந்த தொழிலைத் தொடங்கியபோது தரையில்தான் கோழிகள் வளர்க்கப்பட்டன. இதனால் கோழிகளின் எச்சத்தை அகற்றுவது, அவற்றுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தன. இதேபோல், நோய் தொற்று ஏற்பட்டு, கோழிகள் அதிக அளவில் இறந்தன.

இதனால் பெரும் நஷ்டமடைந்த பண்ணையாளர்கள் தரையில் கோழிகளை வளர்ப்பதைத் தவிர்த்து, கூண்டு முறையில் (கேஜ் கோழிகளை வளர்க்கத் தொடங்கினர். அந்த வகையில், தற்போது நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் 4 கோடிக்கும் மேற்பட்ட முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தன்னார்வ அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள், அனைத்து மாவட்ட இணை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியது:

கூண்டு முறையில் 50,000 கோழிகளை வளர்க்க 5 பணியாளர்கள் இருந்தால் போதும். ஆனால், தரையில் வளர்க்க 25 பேர் வரை தேவைப்படுவர். ஏற்கெனவே கோழிப் பண்ணை தொழிலில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. கூண்டில் அடைத்து கோழி வளர்க்க சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்து இருப்பதால், பணியாளர்கள் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். இதேபோல் இடமும் அதிக அளவில் தேவைப்படும். மேலும், கூண்டு முறையில் நாள் ஒன்றுக்கு ஒரு கோழிக்கு 250 மில்லி லிட்டர் தண்ணீர் இருந்தால் போதும். ஆனால், தரையில் வளர்த்தால் 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

தற்போதுள்ள வறட்சி காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 10 சதவீதப் பண்ணைகளில் கோழிகள் வளர்க்கப்படுவது இல்லை. இதேபோல் தரையில் வளர்த்தால், நோய் ஏற்பட்டு, கோழிகள் அதிக அளவில் இறந்துபோக வாய்ப்புள்ளது. இதனால் கோழிகளை கூண்டில் வளர்க்க தடை நீடிக்கும் பட்சத்தில் முட்டைக்கான உற்பத்திச் செலவு பல மடங்கு உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.15 ஆக உயர வாய்ப்புள்ளது. எனவே, தொழிலில் உள்ள பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, கூண்டில் அடைத்து கோழிகளை வளர்க்க நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை நீக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் .

மேலும் தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் கூண்டு முறையில் வளர்ப்பதற்காகவே உருவாக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் சுகாதார முறையில் கோழி வளர்ப்பு என்றால் கூண்டு முறையில்தான் வளர்க்க முடியும். தரையில் வளர்க்கப்படும் கோழிகளின் முட்டைகளை ஏற்றுமதி செய்வதிலும் பிரச்சினை உள்ளது. சாதாரன நாட்டுக்கோழிகளை யாரும் கூண்டில் வளர்ப்பதில்லை.

இதற்காக பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படும் கோழிக்குஞ்சுகளை மட்டுமே வாங்கி அவற்றை கூண்டுகளில் வளர்க்கின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இது குறித்து தேவையான நடவடிக்கை எடுத்து கூண்டுகளில் கோழி வளர்ப்புக்கான தடையை நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!