In 2nd phase, higher education scholarship for 681 female students; Collector launched in Perambalur!

தமிழ்நாடு முதலமைச்சரின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் இரண்டாம் கட்டமாக “புதுமைப்பெண் திட்டத்தை” திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000/- வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 681 மாணவிகளுக்கு வங்கி பற்றட்டைகளை, எம்.எல்.ஏ பிரபாகரன், போலீஸ் எஸ்.பி ஷ்யாம்ளா தேவி, மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

பெண் பிள்ளைகளின் கல்வி எந்தக்காரணம் கொண்டும் தடைபட்டு விடக்கூடாது, இடைநிற்றல் இருக்கக்கூடாது, அரசுப்பள்ளிகளில் பயின்ற பெண்களின் உயர்கல்வி கனவை நினைவாக்க வேண்டும் போன்ற பல உன்னத நோக்கங்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் திட்டம்தான் புதுமைப்பெண் திட்டம்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு / பட்டயப் படிப்பு / பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ1,000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

”புதுமைப் பெண்” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முதற்கட்டமாக 05.09.2022 அன்று செயல்படுத்திய நாளில், நமது பெரம்பலுார் மாவட்டத்தில் 1,671 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக 681 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,81,000/- வழங்கப்படவுள்ளது.

கல்வி மட்டும்தான் மாணவர்களை எதிர்காலத்தில் ஆளுமைமிக்கவர்களாக உருவாக்கும். உடலளவிலும், மனதளவிலும் நாம் சிறப்பாக பயணிக்க கல்விதான் அடிப்படை. அதேபோல பொருளாதார சுதந்திரத்தை மட்டுமல்ல, உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதும் கல்விதான். பொருளாதார சுதந்திரம் இருந்தால் வாழ்க்கையை உங்களது விருப்பத்திற்கு நிர்ணயித்துக் கொள்ளலாம்.

கல்வியறிவு இல்லையென்றால், பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போகும். அவ்வாறு பொருளாதார சுதந்திரம் இல்லையென்றால் நம் வாழ்வில் இறுதிவரை வேறு ஒருவரை சார்ந்திருக்க வேண்டியதாக இருக்கும். பெண் என்பவள் பருவத்தின்போது பெற்றோரையும், திருமணத்திற்கு பிறகு கணவரையும், பிறகு குழந்தைகளையும் சார்ந்திருக்க வேண்டியதாக இருக்கின்றது. அதனை மாற்றுவதற்கு நமக்கு கிடைத்த ஆயுதம் கல்வி. நான் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி என்பதில் பெருமைப்படுகிறேன். கல்வியினை முறையாகப் பயன்படுத்தியதால்தான் இன்று உங்கள் முன்பு மாவட்ட ஆட்சித்தலைவராக நின்றுக் கொண்டிருக்கின்றேன்.

பெண்கள் உயர்கல்விக்கு எதுவும் தடையாக இருக்க கூடாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து கல்விக் கனவை தயவு செய்து தடை செய்து விடாதீர்கள். தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி கற்க அனுமதியுங்கள்.

தமிழ்நாடு அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, எழுதுபொருட்கள் என கல்விக்கு ஏதுவான அனைத்து பொருட்களையும் அரசே வழங்கிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் நீட்கோச்சிங், இல்லம் தேடிக் கல்வி என பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. நமது பொறுப்பு என்னவென்றால் இவற்றையெல்லாம் நன்றாக பயன்படுத்திக் கொள்வதுதான், என பேசினார்.

ஆர்.டி.ஓ நிறைமதி, யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை), குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதா ரமேஷ், துணைத் தலைவர் கீதா துரைராஜ், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!