In Annamangalam village Rs. 1 Crore Milk Cooling Station: Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பார்வை கிளை நிலையத்தினையும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினையும் கலெக்டர் க.கற்பகம் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் நிலையம் வர உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம் ஊராட்சி அதிகப்படியான பாலினை உற்பத்தி செய்கிறது.

தாட்கோ மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் டாப்செட்கோ போன்ற திட்டங்களின் கீழ் ஒரு கறவை மாடு வாங்குவதற்கு ரூ.60,000 வீதம் இரண்டு மாடுகள் வாங்குவதற்கு ரூ.1,20,000 கடனுதவி மிக குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இது போன்ற திட்டங்களை பயன்படுத்திக் கறவை மாடுகள் வாங்கி அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலினை ஆவின் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 பிரச்சனைகள் குறித்து விவரம் கேட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை கால்நடை மருத்துவமனை இல்லாததை குறிப்பிட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு தலைமை கால்நடை மருத்துவமனை வேண்டுமென கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கால்நடை துறைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம் மற்றும் கொட்டரை ஊராட்சிக்கு பார்வை கிளை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த கால்நடை மருத்துவமனையினை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என பேசினார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தனித்துவமான மூன்றடுக்கு கருவூட்டல் சேவையினை பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையினர், இந்த சிறப்பு முகாமில் அறிமுகப்படுத்தினர். இந்த சேவையின் மூலம் 100 மாடுகளுக்கு இரத்த பரிசோதனை செய்து, அவற்றில் ஊட்டக்கூறு குறைபாடு உள்ள மாடுகளுக்கு ஊட்டச்சத்து அளித்து, அதன் பின்னர் இயக்குநீர் சமனின்மை (hormonal imbalance) களைந்திட சிகிச்சையளித்து, அதன் நீட்சியாக, வளமுள்ள கருமுட்டை உள்ளதா என புற ஒலி வரைவு கருவி மூலம் கண்டறிந்து, அதன் பின்னர் செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட உள்ளது. இந்த மூன்றடுக்கு கருத்தரிப்பு சிகிச்சை ஒருங்கிணைத்து, கால்நடை விவசாயிகளின் கிராமத்திலேயே செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் “ஒரே கருவூட்டலில் மாடு கருத்தரிப்பு” என்பதும், அதன் நீட்சியாக வருடம் ஒரு கன்று என்பதும் சாத்தியமாகும்.

மேலும் இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், குடற்புழு நீக்கம் செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தீவனப்பயிர் அபிவிருத்தி ஆலோசனை வழங்குதல், நோய் மாதிரிகள் ஆய்வு செய்தல், ஆடு மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், அசோலா மற்றும் செறிவூட்டப்பட்ட வைக்கோல்கள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தல், கால்நடைத்துறை கண்காட்சி நடத்துதல், கறவை மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கறவை பசு தீவனம் மற்றும் கன்று வளர்ப்பு கருத்தரங்கம் நடத்துதல், பசுக்களின் மலட்டுத்தன்மைக்கு ஸ்கேன் கருவி மூலம் நோயின் தன்மையை கண்டறிந்து சிறப்பு சிகிச்சை அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்தால் உடனடியாக இருப்பிடத்திற்கே வந்து கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமில் சிறந்த கன்று வளர்ப்பவர்களை பாராட்டி கலெக்டர் பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், துணை இயக்குநர் மரு.நாராயணன், பால்வளத் துறை பணியாளர்கள், ஆவின் நிறுவன உதவி பொது மேலாளர் முனுசாமி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், யூனியன் சேர்மன் குணசேகரன், அன்னமங்கலம் ஊராட்சித் தலைவி மருதாம்பாள் மற்றும் அரசு அலுவலர்கள், கால்நடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!