வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் துவங்கிட பயனாளிகள் தேர்விற்கான சிறப்பு முகாம் என நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் நந்தகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வடகிழக்குப் பருவமழையின்போது பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிகப்படியான இந்த வெள்ள பாதிப்பு காரணமாக தமிழ்நாடு அரசு ஒட்டு மொத்த தமிழ்நாடும் வெள்ளம் பாதித்ததாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், ஏற்கனவே வழங்கிய கடன்களுக்கு கடன் தவணையை ஒத்தி வைத்தல், மறு கடன் உதவி போன்ற பல சலுகைகளை வழங்க தமிழக அரசால் அறிவுரை வழங்கப்பட்டு வங்கிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 14.01.2016 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குறுந் தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 5,000 இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருவது மட்டுமல்லாமல் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் இத்திட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட பயிற்சியிலிருந்து விலக்கு அளித்து 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, திட்ட மதிப்பில் 25 விழுக்காடு அரசு மானியத்துடன் ரூ.5 இலட்சம், ரூ.3 இலட்சம் மற்றும் ரூ.1 இலட்சம் வரை முறையே உற்பத்தி (அ) சேவை (அ) வியாபார தொழில் துவங்கிட கடன் வழங்கப்படுகிறது. இதில் முதலீட்டாளரின் பங்கு பொதுப் பிரிவினர்க்கு 10 விழுக்காடும் சிறப்புப் பிரிவினர்க்கு 5 விழுக்காடும் ஆகும். சிறப்புப் பிரிவினர் என்பது பட்டியல் இனம் ஃ பட்டியல் பழங்குடியினர் (அ) பிற்படுத்தப்பட்ட வகுப்பு (அ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கை ஆகியோராவர்.
எனவே, மாவட்ட தொழில் மையம் ஏற்பாடு செய்துள்ள பயனாளிகள் தேர்வு சிறப்பு முகாம் 25.01.2016, 27.01.2016 மற்றும் 29.01.2016 ஆகிய தினங்களில் முற்பகல் 10.00 மணியளவில் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் பங்குபெற எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கும், 18 வயது பூர்த்தியாகியதற்கான சான்றாக பள்ளி கல்லூரி மாற்றுச் சான்றிதழகளின் நகல்கள் இரண்டும், வசிப்பிடத்திற்கான சான்றாக குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்கள் இரண்டுடன் அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
இயந்திரங்கள் வாங்கும்பட்சத்தில் இயந்திர தளவாடங்களுக்கான விலைப்பட்டியல் கொண்டு வர வேண்டும். முகாமில் உரிய விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு, அதைப் பூர்த்தி செய்வதற்கு வழிகாட்டி, உடனடியாக தேர்வு செய்யப்படுவர். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் மாவட்டத் தொழில் மையத்திலிருந்து விண்ணப்பம் பெற்றுச் சென்ற பயனாளிகளும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலுள்ளவர்களும், இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடன்பெற வங்கிகளுக்கு பரிந்துரை செய்து கடன் ஒப்புதல் ஆணை பெற்று கடன் மற்றும் மானியம் பட்டுவாடா செய்வது வரை மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளர் அவர்களால் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இந்த சிறப்பு கடன் திட்டத்தினை செம்மையான முறையில் விரைந்து செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் வாராந்திர வங்கியாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கே.ஜி.எம். நகர், பெரம்பலூர் -621 220 என்ற முகவரியில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை நேரடியாகவோ அல்லது 04328-291595 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம், என இவ்வாறு தெரிவித்துள்ளார்.