In Musiri, Banana Jam Factory, Onion Export Centre: Candidate Parivendar confirmed in vote collection!
பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கு உட்பட்ட முசிறி பகுதியில் பாஜக கூட்டணியில் ஐஜேகே சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவேந்தர் பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலில் போட்டியிட்ட போது எம்பி ஆக என்னை தேர்வு செய்தீர்கள். எம்.பி.க்கு என்ன நிதி ஒதுக்கீடு செய்யப்படுமோ அந்த நிதியை முழுவதுமாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக செலவிட்டு இருக்கிறேன். அதே வேளை 1500 மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வியை எனது சொந்த செலவில் வழங்கி இருக்கிறேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்னை மீண்டும் நீங்கள் எம்பி.யாக தேர்வு செய்தால் 1500 குடும்பத்தினருக்கு உயர்தர சிகிச்சை இலவசமாக அளிக்கும் திட்டத்தையும் வாக்கு உறுதியாக அளிக்கிறேன். மேலும், இப்பகுதியில் விவசாயிகள் வாழ்வு மேம்பட பாராளுமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுப்பேன், முசிறி பகுதியில் பொதுமக்கள் வேலை வாய்ப்பு பெரும் வகையில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளிலும் மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம் நடைபெறும். அதன் வழியாக பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை எனது மருத்துவக் கல்லூரி வழியாக அளிக்கப்படும்.
இது தவிர மாதந்தோறும் குறைதீர் முகாம் தொகுதிகளில் நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக பொதுமக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன். குறிப்பாக முசிறி தொகுதியில் வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மையம், வாழைப்பழத்தில் இருந்து ஜாம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்வதற்கான தொழிற்சாலையும் அமைக்க பாடுபடுவேன்.
எனவே, வரும் தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். அப்போது கட்சி நிர்வாகிகள் ஐ.ஜே.கே மாநில செயலாளர் ஏகேடி.வரதராஜன், மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் தண்டபாணி, ஓ.பி.எஸ் அணி ஒன்றிய செயலாளர் ராமசாமி, நகர செயலாளர் நந்தினி சரவணன், பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்வன், அ.ம.மு.க ராஜேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.