பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலியை நள்ளிரவு நேரத்தில் கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி குடியிருப்பு வாசிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் தன்ராஜ் (35) இவரது மனைவி பத்மாவதி (30). தன்ராஜ் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், குழந்தைகளுடன் வசித்து வந்த பத்மாவதி நேற்று வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இதனிடையே நள்ளிரவில் வீட்டினுள் புகுந்த டவுசர் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் பத்மாவதி கழுத்தில் அனிந்திருந்த 10 பவுன் தாலி கொடியை பறித்து கொண்டு தப்பியோடினார்.
இதனையறிந்த பத்மாவதி திருடன், திருடன் என கூச்சலிட்டதால் அக்கம் வசிப்பவர்கள் ஓடி வந்து, சம்பவம் குறித்து கேட்டறிந்து தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடியுள்ளனர். அதற்குள் அந்த மர்ம நபர் மாயமானார்.
இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் பத்மாவதி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.