In Perambalur, a special camp for the rehabilitation of repentant women involved in drug trafficking!

பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

திருச்சி மத்திய மண்டலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் முதன் முதலாக மது மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு திருந்திய மகளிருக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தவறு செய்வது மனித இயல்பு. அதனை வாய்ப்பு கிடைக்கும்போது திருத்திக் கொள்ள வேண்டும். இங்கு வந்துள்ள உங்கள் மறுவாழ்வுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு டான் அறக்கட்டளை மற்றும் சுப்ரீம் லயன்ஸ் சங்கம் உதவியாக இருக்கும் அதன் பொறுப்பாளர்கள் இங்கு கூறியுள்ளார்கள். இங்கு வந்திருக்கும் உதவி ஆணையர் கலால் அவர்களும் உங்களது மறுவாழ்வுக்காக அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்றுத் தர தயாராக உள்ளார்.
எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சமூகத்தில் கௌரவமாகவும், மதிப்புடனும் வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து உங்களை நல்வாழ்வு நிலை மேம்படும் வரை உதவியாக கண்காணிக்கும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் /சார்பு நீதிபதி லதா பேசியதாவது: திருக்குறளை மேற்கோள் காட்டி மதுவினால் ஏற்படும் தீமைகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார். எனவே அதிலிருந்து விடுபட வேண்டும் என அறிவுரை வழங்கி அவர்களுக்கு தேவைப்படும் சட்ட உதவிகளை இலவசமாக செய்ய சட்டப்பணிகள் ஆணைக்குழு தயாராக உள்ளதாக பேசினார். பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி மணி, சமூக ஆர்வலர் மித்ரா, சுப்ரீம் பன்னாட்டு லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் 120 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!