In Perambalur, a symbolic march by the police; The collector flagged it off!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் போலீசாரின் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான க.கற்பகம் போலீஸ் எஸ்.பி ச.ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்து, அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சியில் நடந்து சென்றார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களின் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து, நடத்தப்பட்டு வருகின்றது.
வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றியும், தயக்கமின்றியும் வாக்களிக்கும் வகையில் ஒடிசா மாநிலத்திலிருந்து 182 துணை இராணுவ வீரர்கள் (CRPF) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணை இராணுவ வீரர்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் கலந்து கொண்ட அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். மேலும் இந்த அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி சங்குப்பேட்டை வழியாக பெரம்பலூர் வானொலி திடலில் நிறைவுற்றது.