In Perambalur, awareness marathon on the evils of single use plastic: Collector Notice !
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் , ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் (Single Use Plastic) தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நெகிழிக்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்தவும், மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை 23.12.2021 அன்று தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் துறைகளின் ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 05.07.2023 அன்று காலை 7.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் துறையூர் ரோடு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகம் வரை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரியலூர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பெரம்பலூர் இணைந்து “ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிக்கு எதிரான மக்கள் பிரச்சாரம்” மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.
பதிவு செய்ய விரும்புவர்கள் அனைவரும் 04.07.2023 அன்று மாலை 6.00 மணி வரை தொலைபேசி எண்: 9080100887 அல்லது மின்னஞ்சல்: plasticfreemarathonperambalur@gmail.com மூலம் இலவச பதிவு செய்யலாம். 05.07.2023 அன்று காலை 6.00 மணி முதல் காலை 6.30 மணி வரை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் நேரில் பதிவு செய்யலாம்.
முதல் 3 வெற்றியாளர்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000 மற்றும் ரூ.2,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். அடுத்த 7 வெற்றியாளர்களுக்கு தலா ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள பரிசுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக வழங்கப்படும். நிகழ்வின் முடிவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.