In Perambalur, Bonded Labor Abolition Day, Legal Awareness Camp!
பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, சர்வதேச நீதிக் குழுமம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து பிப்-9 கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்புத் தினத்திற்காக சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் தலைமையில் பெரம்பலூரில் நடத்தியது.
நீதிபதி பல்கீஸ் பேசியதாவது: மக்களாகிய நாம் வேலை செய்யும் போது அதற்கான சரியான ஊதியத்தை பெறுவது இந்திய அரசியல் சட்டத்தின் படி உரிமையாக்கப்பட்டுள்ளது. கட்டாயப்படுத்தியோ, முன் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து, குறைந்த ஊதியம் வழங்கியோ, அதிக நேரம் வேலை வாங்குவது போன்ற செயல்கள் கொத்தடிமை முறையாகுவதால், இது போன்ற செயல்கள் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் நாம் ஏற்றுக்கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டமானது பல்வேறு பிரிவுகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பினை உறுதிபடுத்தியுள்ளது.
மனிதனை மனிதன் சுரண்டுவதும், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி கொத்தடிமையாக்கி வேலை வாங்குவதும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும், உடல் உறுப்புகளை திருடி விற்பதும், கடுமையான முறையில் சட்டத்தின் முன்பு தடுக்கப்பட்டு, இது போன்ற தீய செயல்களில் ஈடுபடுவேரை தண்டிப்பதற்கு இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் மக்களிடையே சட்ட அறிவினை வழங்கி விழிப்புணர்வு பெற பெரிதும் பங்காற்றுகிறது.
கொத்தடிமை முறையில் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வினை ஏற்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித்தொகை உடனடியாக வழங்கி அவர்களுக்கு மறு வாழ்வினை ஏற்படுத்துகிறது அது மட்டுமல்லாமல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆய்வுகளை மேற்கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயே முற்றிலும் கொத்தடிமை தொழிலாளர் முறை இல்லா நிலையினை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதிமொழியினை ஏற்று செயல்பட வேண்டும். அதற்கான முயற்சியாகத்தான் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது என பேசினார்.
கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழித்திடும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. கொத்தடிமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது.
தொழிலாளர் நலத்துறையில் அடையாள அட்டை வழங்குவதற்காக 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செயலாளர்/சார்பு நீதிபதி (பொ) எஸ். அண்ணாமலை அனைவரையும் வரவேற்று பேசினார்.
தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், தொழிலாளர் உதவி ஆய்வாளர், சாந்தி, இந்தோ டிரஸ்ட் முகமது உஷேன், சர்வதேச நீதிக்குழுமத்தின் வழக்கறிஞர் பிரபு மற்றும் அலுவலர் மைக்ஓஸ்டின், குழந்தைகள் நல அலுவலகத்தின் சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத், போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் மருதமுத்து, வழக்கறிஞர்கள் கவியரசன், அருண்பிரசாத், இந்தோ டிரஸ்ட் பணியாளர் செல்வக்குமார், கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் நன்றி கூறினார்.