In Perambalur district, a consultation meeting of the small scale textile park project was held under the chairmanship of the collector.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பாக தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இதில் 27 ஜவுளி தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொது பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில்முனைவோர்கள் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் பட்சத்தில், இத்திட்டத்திற்கு தேவைப்படும் 2 ஏக்கர் நிலம் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக குத்தகை அடிப்படையில் வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 17 ஜின்னிங் நூற்பாலைகள் இயங்கிவந்த நிலையில், பஞ்சு தட்டுப்பாடு காரணமாக தற்போது 11 ஜின்னிங் நூற்பாலைகள் மட்டுமே இயங்கிவருகிறது. அதிக மகசூல் தரும் பருத்தி விதைகளை பருத்தி ஆராய்ச்சி மையம் மூலம் கண்டறிந்து வேளாண்மை துறை மூலம் பெரம்பலூர் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர், மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, எண். 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான்தோன்றிமலை, கரூர்-639 005 (தொலைபேசி எண் :04324- 299 544, +91-9843212584) என்ற முகவரியினை தொடர்பு கொள்ளலாம், என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.