In Perambalur, Minister Udayanidhi provided welfare assistance worth Rs. 20.85 crores on behalf of the government!

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அரசு செயலாளர் தரேஸ் அஹமது, கலெக்டர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட முகாம்கள், வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்தும், விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று பதிவு செய்யப்பட்ட தகவல்களின் உண்மை நிலை குறித்து ஆய்வு செய்த விபரம் குறித்தும் கேட்டறிந்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, பயன்பெறும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறித்தும் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார்.

பின்னர் ஒவ்வொரு துறை ரீதியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் முகவரி திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள் குறித்தும், ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டுறவுத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள் விபரம் குறித்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்தும், சமூக நலத்துறையின் மூலம் ஊட்டச் சத்துக் குறைபாடுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ள விபரம் மற்றும் அவர்களின் உடல் நிலையை மேம்படுத்த செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, தாட்கோ, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 987 பயனாளிகளுக்கு ரூ.20.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

இதில் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.இராஜேந்திரன், வருவாய், ஊரக வளர்ச்சி, யூனியன் சேர்மன்கள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் மீனா அண்ணாதுரை, வேப்பூர் பிரபாசெல்லப்பிள்ளை, வேப்பந்தட்டை ராமலிங்கம், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன் மற்றும் அனைத்துத் துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பொதுமக்கள் வழங்கிடும் கோரிக்கை மனுக்கள் வெறும் தாள்கள் அல்ல அவர்களுடைய வாழ்க்கை என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதற்கு ஏற்ப பொதுமக்களின் ஒவ்வொரு கோரிக்கை மனு மீதும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்குவது பூமாலை விற்பனை வளாகம் அமைப்பது போன்றவை பெண்களுக்கு பொருளாதார சுத்நதிரம் தரக்கூடிய முன்னோடி திட்டங்களாகும். எனவே அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு கல்விக்கும் சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்விக்கு அருகே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நான் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வித்திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். இது போன்ற திட்டங்கள் குறித்து கிராமப்புற மாணவ மாணவிகளிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தில் தகுதியுள்ள அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் பயனாளிகளை தேர்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று ஆய்வு செய்யப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் உரிய அனுமதி பெற்று செயல்படுத்தப்படும், என பேசினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!