In Perambalur near the 6-month to pay dues of workers who blocked the road demanding arrest
பெரம்பலூர் மாவட்டம், வெண்மணி ஊராட்சியில் சம்பளம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட தேசியஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் 94க்கும் மேற்ப்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வெண்மணி ஊராட்சிக்குட்பட்ட பெரியவெண்மணி, சின்னவெண்மணி, கொத்தவாசல், புதுக்குடிசை ஆகிய கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாத காலமாக வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பணி வழங்குவதில் பாரபட்சம் காட்ட கூடாது, முறைகேடுகளை தடுக்க வேண்டும், பணியில் ஈடுபடுபவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும். சம்பள பணம் எடுக்க வங்கிக்கு செல்லும் போது தரக்குறைவாக பேசுவதோடு, பணத்தை இதர கடன்களுக்காக பிடித்தம் செய்யும் துங்கபுரம் ஐ.ஓ.பி., வங்கி மேலாளர் உள்ளிட்ட வங்கி ஊழியர்களை கண்டித்தும் 150க்கும் மேற்பட்டோர் அரியலூர்-அகரம்சீகூர் சாலையில் காந்தி, அம்பேத்கர், வ.உ.சிதம்பரனார், பாரதியபார், கொடிகாத்த குமரன், உள்பட பல்வேறு தலைவர்களின் படத்துடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் காவல் நிலையத்தினர் மற்றும் மனித உரிமை கழக டி.எஸ்.பி.,குமரவேல், இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் மற்றும் ஆர்.ஐ.,மாலதி, கிராம நிர்வாக அலுவலர்கள் புதுவேட்டக்குடி ரகு, வெண்மணி கண்ணன், கொத்தவாசல் வெங்கடேசன், புதுக்குடிசை தீரன்சின்னமலை, ஓலைப்பாடி முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து 73 பெண்கள் உட்பட 94க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி குன்னத்திற்கு அழைத்து சென்று தனியார் பள்ளி ஒன்றில் தங்க வைத்தனர்.
உள்ளாட்சி தேர்தல் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சார்பில் சற்றுமுன் நிகழ்ந்த சாலை மறியல் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.