பெரம்பலுார் : தனிநபர் கழிவறை திட்டத்தில் பண மோசடி செய்த தலைவர், துணை தலைவர், பஞ்சாயத்து எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அயினாபுரம் ஊராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அயினாபுரம் ஊராட்சியில் 2014-2015 ஆண்டுக்கான நிர்மல் பாரத் அபியான் திட்டத்தில் ஐந்து தனி நபர் இல்லக்கழிவறைகள் கட்டப்பட்டதாக தெரிகிறது.
இதற்காக, பயனாளிகள் பங்குத்தொகை 900 ரூபாய் போக, தலா 5,700 ரூபாய் என 28,500 ரூபாய் பஞ்சாயத்து நிதியிலிருந்து பயனாளிகளுக்கு காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.
இதில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்த வீரப்பு மகன் கந்தசாமி என்பவர் பெயருக்கு 5,700 ரூபாய்க்கு செக் போடப்பட்டு, வேறு நபர் கொளக்காநத்தம் கனரா வங்கி கிளையில் மாற்றம் செய்ய முயற்சித்த போது, காசோலை மோசடி செய்திருப்பதும், ஆள்மாறாட்டம் செய்து, செக்கை மாற்ற முயற்சித்ததும் தெரியவந்தது.
இந்த மோசடியில் அயினாபுரம் ஊராட்சி தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கதிரேசன், எழுத்தர் அருள்மொழி ஆகியோர் கூட்டாக ஈடுபட்டுள்ளனர். எனவே, இப்பிரச்சனை குறித்து விசாரித்து, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.