In Perambalur, one person died in a collision with a bike driven by school students! Another one is seriously injured!!
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவர்கள் ஓட்டி சென்ற பைக், முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதி கீழே விழுந்த போது பின்னால், வந்த லாரி மோதியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் அரணாரையை சேர்ந்தவர் கணேசன் மகன் தீபக் (17, வெள்ளனூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் பாலாஜி (17), இருவரும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். இன்று செய்முறை தேர்வை முடித்த இருவரும் தீபக்கின் உறவினரான தம்பிரான்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் பைக்தில் தீபக் பாலாஜியை ஏற்றிக் கொண்டு புதிய பேருந்து நிலையத்தை நோக்கி மதியம் சுமார் 12.15 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை தீபக் ஓட்டினார். பெரம்பலூர் சங்குபேட்டை அடுத்த தனியார் வங்கி அருகே சென்ற போது முன்னே சென்ற பதிவெண் தெரியாத ஷேர் ஆட்டோவின் பின்னால் மோதி விழுந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த லாரி மாணவர்கள் மீது எதிர்பாரதவித்தில் மோதியது. இதில் மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இதில் பாலாஜிக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டு, பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் தீபக் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், லாரி டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த கேசவன் (57) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.