In Perambalur, Pongal gift: 1,90,267 ration card holders launched by Collector Venkatabriya!
பொங்கல் பண்டிகையை சீரும் சிறப்புமாக கொண்டாட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் திருநாளாம் பொதுவிநியோகத் திட்டத்தில் பயன்பெறும் 2 கோடியே 19 இலட்சம் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான பொங்கல்பரிசு தொகுப்பினை அறிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் ஆகியவைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1,90,267 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் 09.01.2023 முதல் விநியோகிக்கப்பட உள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 281 நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1,89,444 (அமுதம் அங்காடி குடும்ப அட்டைகள் 823 நீங்கலாக) குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 ரொக்கம் விநியோகிக்க ஏதுவாக ரூ.18,94,44,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலமாக ரொக்கம் விடுவிக்கப்பட்டு இரண்டு 500 ரூபாய் தாள்களாக அங்காடிகளில் 09.01.2023 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விரியோகிக்கப்பட உள்ளது.
இன்று முதல் 13.01.2023 வரை 5 நாட்களிலும் நாளொன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் சுழற்சி முறையில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்குவதற்கு ஏதுவாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அனைத்து அங்காடிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா இன்று காலை தமிழ்நாடுமுதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தவுடன், பெரம்பலூர் மாவட்டத்தில், ஆலம்பாடி சாலையில் உள்ள அமராவதி சமத்துவபுரம் அங்காடியில் கலெக்டர் வெங்கடபிரியா, பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். டி.ஆர்.ஓ அங்கையர்கண்ணி, ஆர்.டி.ஓ நிறைமதி, தாசில்தார் கிருஷ்ணைராஜ், மற்றும் விஏஓக்கள் அகிலன், ராமச்சந்திரன் மற்றும் பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனாஅண்ணாதுரை, நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், கவுன்சிலர்கள் சிவக்குமார், துரை.காமராஜ், ஆகியோரும், கூட்டுறவுத் துறை மண்டலப் பதிவாளர் செல்வராஜ், துணைப் பதிவாளர் பாண்டியன், மற்றும் திமுக பிரமுகர்கள். ஒஜுர், ரெனோ பாஸ்டின், பரிதி.இளம்வழுதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.